முன்குறிப்பு:
இந்த செய்தி மக்களிடையே எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த பிரசுரிக்கப்படுகிறதே அன்றி, அச்சம் ஏற்படுத்த அல்ல.
கொரோனா இரண்டாவது அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் திங்கள் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாள்களாகவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் - மாநிலத்தில் - சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் கோவை உள்ளது.
அதேபோல, கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அதிகரிக்கும் மரணங்களால், கோவை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் இறந்தவர்களின் உடல்கள் அளவுக்கு அதிகமாக வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
Also Read: கங்கையில் மிதக்கும் கொரோனா பிணங்கள்... பழி போடும் பீகார், உத்திரபிரதேச மாநிலங்கள்!
சவக் கிடங்கின் தரைத்தளத்தில் இருக்கும் ஃப்ரீசர் பாக்ஸ்களில் இருப்பு உள்ள அளவை விட அதிக பிணங்கள் வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிப்புறத்திலும் திறந்தவெளியில் கொரோனாவால் இறந்த உடல்கள் வைக்கப்படும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
கோவையைப் பொறுத்தவரை த.மு.மு.க, ஜீவசாந்தி போன்ற நல்ல உள்ளங்கள் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். த.மு.மு.க மட்டுமே தற்போதுவரை 150-க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
அப்படி இருந்தும் மின் மயானங்களிலும் பிணங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. கோவையில், கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு எட்டு மின் மயானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அனைத்து இடங்களிலும் உடல்களை எரியூட்ட காலதாமதம் ஏற்படுகிறது. பொதுவாக கோவை மின் மயானங்களில் சூரியன் மறைந்த பிறகு உடல்களை எரிக்க மாட்டார்கள்.
ஆனால், இப்போது இரவு 10 மணியைக் கடந்தும் மின் மயானங்களில் பிணங்கள் எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. கொரோனா மரணங்களுக்கு தனியாக மின் மயானங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அங்கு மற்ற உடல்கள் எரிக்க முடியாது. இதன்காரணமாக மற்ற இடங்களில் உள்ள மின் மயானங்களிலும் வழக்கத்தை விட அதிக உடல்கள் எரிக்கப்படுகின்றன.
போதிய இடம் இல்லாததால், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் தினசரி எட்டு உடல்களை எரிக்கின்றனர். இதனால், அந்தப் பகுதி மக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். ``கிட்டத்தட்ட 10,000 குடும்பங்கள் இங்கு வசித்து வருகிறோம். தொடர்ந்து உடல்களை எரிப்பதால், சுற்றுசூழல் மாசுபடுவதுடன் ஒருவித நாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது.
இதனால், குடியிருப்புப் பகுதிகள் இல்லாத, திறந்த வெளியான இடங்களில் அந்த உடல்களை எரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கின்றனர். அரசு அறிவிப்பின்படி கோவையில், கொரோனா பாதித்து திங்களன்று மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கடைசி நேரத்தில் கைவிரித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றனர். அவர்கள் இங்கு வந்து சில மணி நேரங்களில் இறந்துவிடுகின்றனர். வேறு பிரச்னைகளுக்காக சிகிச்சைக்கு வந்தாலும், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அப்படி பரிசோதனை செய்யும்போது பெரும்பாலானோருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகிவிடுகிறது என்கின்றனர் நோயாளிகளின் உறவினர்கள்.
இதனால் கோவையில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளைக் குறைக்க, தேவையான மருத்துவ வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டிய இக்கட்டான சூழல் கோவையில் நிலவுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டாம் அலையின் வீரியம் அதிகரிப்பதால் இப்போதிருப்பதை விட இன்னும் அதிக கவனத்துடன் இருப்பதன் மூலம் மட்டுமே இதை வெல்ல முடியும் என்ற அறிவியல் உண்மையை மக்கள் உணர்ந்து செயல்பட்டால், இதைக் கடந்துவிடலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். மக்களாகிய நாமும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பை நல்கினால், விரைவில் இந்த நோயை வெற்றி கொள்ளலாம்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3y4YEcz
via
