தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான், பாத்திமா நகரைச் சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன். சிப்காட் வளாகம் அருகில் டீக்கடை நடத்தி வந்தார். இவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், கடந்த 9-ம் தேதி மீளவிட்டான் ரயில் நிலையம் அருகில் ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில், சிப்காட் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆயவாளர் சங்கர் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கு சம்மந்தமாக கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பல கொலை வழக்குகளில் தொடர்புடைய மோகன்ராஜை போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், தனது நண்பரான பொன் மாரியப்பன் சொன்னதற்காக லூர்து ஜெயசீலனைக் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. பொன் மாரியப்பன், மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருகிறார்.
விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒத்துக் கொண்டதால், இருவரும் கைது செய்யப்பட்டு பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் குற்றவாளியை பிடித்தது எப்படி என மாவட்ட எஸ்.பி., ஜெயகுமாரிடம் பேசினோம், “கொலை செய்யப்பட்ட லூர்து ஜெயசீலன், சிப்காட் பகுதியில டீக்கடை நடத்திட்டு வந்திருக்கார். அவர் மேல தென்பாகம் போலீஸ் ஸ்டேஷன்ல கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில இருக்கு. ஆனா, 2011-ம் வருஷத்துக்குப் பிறகு அவர் மேல எந்த கிரிமினல் கேஸும் பதிவாகலை. அவரோட உடம்புல 17 இடங்களில் கத்துக்குத்து காயங்கள் இருந்தது.
அதை வச்சுதான், முன்விரோதம் அல்லது பழிக்குப்பழியாகக்கூட இந்தக் கொலை நடந்திருக்கலாம்னு முடிவு செஞ்சோம். அந்தப்பகுதியில உள்ள ஒரு தனியார் மில்லில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை ஆய்வு செஞ்சோம். அதுல ஒரே பைக்கில் ரெண்டு பேரு பதட்டத்தோட போகுறதைப் பார்த்தோம். அந்த வண்டி எண்ணை வச்சு முதலில் மோகன் ராஜை விசாரிச்சோம். மோகன்ராஜ் மேலயும் ஏற்கெனவே சில வழக்குகள் நிலுவையில இருக்கு. அவரை விசாரிச்சதில் பொன் மாரியப்பனின் தாய்மாமாவின் கொலைக்குப் பழிக்குபழியாக ஜெயசீலனைக் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். பொன் மாரியப்பனிடம் விசாரணை நடத்தியதுலயும் கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்டார்” என்றார்.
கொலை செய்த மோகன்ராஜூம், பொன் மாரியப்பனும் அளித்த வாக்கு மூலத்தில், “சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன்ல ஹெட் கான்ஸ்டபிளா இருக்குற பொன் மாரியப்பனோட தாய்மாமா அழகுங்கிறவரை 1998-வது வருஷம் கொலை செஞ்சுட்டாங்களாம். அந்த கொலைக் கேஸுல லூர்து ஜெயசீலனும் ஒரு குற்றவாளி. அதனால, லூர்து ஜெயகுமாரை பழிக்குப்பழியா கொலை செய்யணும்னு எங்கிட்ட நிறைய தடவை அழுது உதவி கேட்டார். 8 வருசமா பொன் மாரியப்பனும் நானும் நண்பர்களா இருந்தோம். சில குற்றவழக்குகள்ல அவர் எனக்கு உதவியிருக்கார்.
அதனால, அவர் சொன்னதுனால லூர்து ஜெயசீலனைக் கொலை செஞ்சேன். ஜெயசீலனை எனக்கு ஏற்கெனவே நல்லாத் தெரியும்கிறதுனால, சரக்கு அடிக்க போலாமான்னு மீளவிட்டான் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் கூட்டிட்டுப் போயில் கத்தியால குத்தினேன். அதுக்குப் பிறகு பொன் மாரியப்பனும் வெறித்தனமா ஜெயசீலன் உடம்புல சரமாரியா குத்தினார். அதுக்குப் பிறகு நாங்க தப்பிச்சுப் போயிட்டோம். சி.சி.டி.வி கேமராவுடல் நாங்க பைக்குல போனதை வச்சு எங்களைப் போலீஸ் பிடிச்சுட்டாங்க” என கூறியுள்ளனர். சில போலீஸார் குற்றவழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களுடன் நட்பாக உள்ளனர். அந்த கூடா நட்புதான் தற்போது கேடாய் முடிந்துள்ளது!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fgeHf5
via
