அரசு உத்தரவை அலட்சியம் செய்து, ஆவின் பால் பாக்கெட்டுகளை கூடுதல் விலைக்கே விற்பனை செய்த பால் முகவர் மீது போனில் புகார் செய்தவுடன், நடவடிக்கை எடுத்த பால்வளத்துறை அமைச்சரின் செயலால் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார் ஆவின் வாடிக்கையாளர் ஒருவர்.
என்ன நடந்தது?
நம்மிடம் பேசிய ராமநாதபுரத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர், (தன் அடையாளம் வெளியிட வேண்டாம் என்றார்), ``அரண்மனை அருகேயுள்ள ஆவின் பால் பூத்தில் பால் பாக்கெட் வாங்க சென்றேன். லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த பால் பூத்காரர் பழைய விலைக்கே கொடுத்தார். அரசு அறிவிப்பை பற்றி கூறியதற்கு அலட்சியமாக பேசினார்.
அரசின் விலை குறைப்பையும் மதிக்காமல், வாடிக்கயாளரையும் மதிக்காமல் பேசிய அந்த பால் முகவர் பற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க நினைத்தேன். சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் தமிழக அமைச்சர்களின் போன் நம்பர்கள் வந்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. அமைச்சர் நம்பருக்கு போன் செய்தால் முதலில் எடுப்பார்களா என்ற சந்தேகம் வந்தது.
இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போம் என்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நம்பருக்கு போன் செய்தேன். உடனே அமைச்சரே எடுத்து, `என்ன விவரம்?’ என்று கேட்டதும் எனக்கு ஆச்சரியம். அதோடு, `ஆவின் பால் பாக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை’ தெரிவித்தேன். உடனே அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாகக் கூறியவர், அலுவலர் ஒருவரின் நம்பரை எனக்கு கொடுத்தார்.
அந்த நம்பரில் பேசியவுடன், ஆம் அமைச்சர் கூறினார், காரைக்குடி ஆவின் மார்க்கெட்டிங் மேனேஜரிடம் தகவல் தெரிவிப்பதாக கூறினார். சிறிது நேரத்தில் காரைக்குடி மார்க்கெட்டிங் மேனேஜர் என் லைனில் வந்து, ராமநாதபுரம் வந்து கொண்டிருப்பதாகவும், என்னை பார்க்க வீட்டுக்கு எப்படி வர வேண்டும் என்று ரூட் கேட்டவர், சில மணி நேரத்தில் வந்து என்னிடம் ரிட்டனாக புகார் எழுதி வாங்கிக்கொண்டவர், புகாரை விசாரித்து சம்பந்தப்பட்ட ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறி சென்றார்.
உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக இருக்கு. கொரோனா ஊரடங்கு நேரத்தில் சாமனியனான நான் பால்வளத்துறை அமைச்சரிடம் போனில் பேச முடிகிறது. நான் சொன்ன புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே விசாரிக்க உத்தரவிட்டது, இதற்காக காரைக்குடியிலிருந்து ஆவின் மார்க்கெட்டிங் மேனேஜர் வாகனம் மூலம் ராமநாதபுரம் வந்ததை பார்த்தது பிரமிப்பாக உள்ளது" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3eZNEWp
via
