வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற திருவிழாக்களில், வேலங்காடு வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோயில் ஏரித்திருவிழாவும் ஒன்றாகும். வேலங்காடு கிராமத்திலுள்ள ஏரியில் எழுந்தருளியிருக்கும் பொற்கொடி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமையில் இந்த விழா எடுக்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும், அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளும் நோய் நொடியின்றியிருப்பதற்காக வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நூறாண்டுகளுக்கும் மேலாக இணைந்து நடத்துகிறார்கள்.
ஏராளமான பக்தர்கள் தங்கள் பாரம்பர்ய வழக்கப்படி மாட்டு வண்டியில் பசுந்தழைகள் கட்டி தென்னை ஓலையை கூடாரம்போல் அமைத்தும், டிராக்டர், வேன், ஆட்டோக்களிலும் குடும்பத்துடன் உறவினர்களை அழைத்துக்கொண்டு வருவார்கள். அதன்படி, இந்தாண்டுத் திருவிழா இன்றும், நாளையும் நடக்கவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவலாலும், முழு ஊரடங்கு அமலில் இருப்பதாலும் பொற்கொடியம்மன் ஏரித்திழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
பக்தர்கள் கோயிலுக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊரடங்குக் காரணமாக கோயிலுக்கு வெளியிலும் பக்தர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் ஏரியின் நுழைவுப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், முன்னறிவிப்பு பேனர்களும் கட்டி வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டாலும் இன்றும், நாளையும் பொற்கொடியம்மனுக்கு எளிமையான முறையில் சிறப்பு பூஜைகள் மட்டுமே நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிலும், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை. ஏரியில் பொங்கல் வைக்கவும், சுவாமி தரிசனம் செய்யக்கூட அனுமதியில்லை என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், தடையை மீறி கோயிலுக்கு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய நான்கு கிராமங்களிலும் அணைக்கட்டு காவல்துறையினர் தண்டோரா போட்டு அறிவுறுத்தியுள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3o7ufFT
via
