கேரளாவின் முதல் பெண் அமைச்சர்; மூதுபெரும் அரசியல்வாதி கே.ஆர்.கெளரி அம்மா காலமானார்!

0

கேரள மாநிலத்தின் பழம்பெரும் அரசியல்வாதி கே.ஆர்.கெளரி அம்மா. சேர்த்தலா பட்டணங்காடு பகுதியில் 1919 ஜூலை 14-ம் தேதி கெளரி அம்மா பிறந்தார். திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். அதன்மூலம் ஈழவ சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் தனது 28 வயதில் தீவிர கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை கடைபிடித்து வந்தார். சிறை வாசம், போலீஸின் கொடுமைகள் என ஆரம்பகாலத்திலேயே மிகக்கடுமையான துயரங்களைச் சந்தித்தார்.

13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஆறு முறை அமைச்சராகவும் இருந்தார். இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த சமயத்தில் அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் ஜனாதிபத்ய சம்ரக்‌ஷண சமிதி என்ற கட்சியை தொடங்கி நடத்திவந்தார். முதலில் அக்கட்சியின் தலைவராக இருந்தவர் மற்றவர்களுக்கு வழிவிட்டு பொதுச்செயலாளர் ஆனார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து 2001 முதல் 2006 வரையிலான உம்மன்சாண்டி அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தார்.

கெளரி அம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளத்தில் முதல் பெண் அமைச்சர் கெளரி அம்மா என்பது குறிப்பிடத்தக்கது. நில சீர்திருத்தச் சட்டத்தை கேரளத்தில் கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றியவர் கெளரி அம்மா. திருவிதாங்கூர் திவானாக இருந்த சி.பி.ராமசுவாமி அய்யரின் ஆட்சிக்கு எதிராக போராடினார். புன்னப்புரா - வயலார் போராட்டம்தான் கெளரி அம்மாவை தீவிர அரசியலுக்கு இட்டுச்சென்றது.

1948 திருவிதாங்கூர் - கொச்சி சட்டசபை தேர்தலில் சேர்த்தலா தாலுகாவில் துறவூர் தொகுதியில் முதன் முதலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார். 1952 மற்றும் 1954 தேர்தல்களில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டசபைக்குள் நுழைந்தார். ஒன்றிணைந்த கேரள மாநிலத்தில் 1957-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அந்த அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும் ஆனார்.

கே.ஆர்.கெளரி அம்மா

டி.வி.தாமஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் கெளரி அம்மா. 1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரிந்த சமயத்தில் கே.ஆர்.கெளரி அம்மா சி.பி.எம் கட்சிக்கும், அவரது கணவர். டி.வி.தாமஸ் சி.பி.ஐ-க்கும் சென்றனர். அதன்பிறகு கணவரையும் பிரிந்தார். கேரள அரசியலில் மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட கே.ஆர்.கெளரி அம்மா தொற்று நோயால் அவதிப்பட்டு, திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு 102 வயது ஆகிறது. அவரது நல்லடக்கம் இன்று மாலை நடைபெற உள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3eBkqwQ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*