`தப்பா எடுத்துக்காதீங்க; என் வீட்டுக்கு யாரும் வரவேண்டாம்!' -கரூர் ஆசிரியையின் விழிப்புணர்வு முயற்சி

0

`கொரோனா நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, நண்பர்களே, நீங்கள் யார் வீட்டுக்கும் செல்ல வேண்டாம். எனது இல்லத்துக்கும் யாரும் வர வேண்டாம். இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்று கரூர் பெண் ஒருவர் தனது வீட்டின் முன்பு எழுதி வைத்துள்ளார். அதோடு, கொரோனா குறித்த எச்சரிக்கை வாசகங்களையும், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும் விதமான உணவுப் பட்டியலையும் அதில் எழுதி வைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் படுக்கை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமல் அல்லாடி வருகிறார்கள்.

எச்சரிக்கை வாசகத்துடன் சித்ரா

இன்னொரு பக்கம், பிரபலங்கள் பலரின் மரணங்களையும் இளவயதினரும் இந்த அலையில் உயிரிழக்க நேரிடுவதையும் பார்த்துவரும் மக்களை, கொரோனா அச்சம் சூழத் தொடங்கியிருக்கிறது. மருந்து வாங்குவதற்கும், மருத்துவமனைகளில் படுக்கை வசதியை பிடிப்பதற்கும், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகளை நாம் காண்கிறோம்.

ஆனாலும், இன்னொரு பக்கம் அதன் வீரியம் புரியாமல் மக்கள் மாஸ்க் போடாமல் செல்வதும், சானிட்டைஸரை பயன்படுத்தாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் சாலைகளில் வலம் வருவதும் நடக்கிறது.

அதோடு இன்னும் சிலர், `எனக்கெல்லாம் கொரோனா வரவே வராது. வயதானவர்களுக்கும், உடம்பில் நோய் உள்ளவர்களுக்கும் மட்டுமே அது வரும்' என்று அதீத நம்பிக்கையில் முன்னெச்சரிக்கை முறைகளை மேற்கொள்ளாமல் வளைய வருகிறார்கள்.

இந்நிலையில்தான், கரூர் காந்தி கிராமம் திண்ணப்பா நகரில் வசிக்கும் முன்னாள் தனியார் பள்ளி ஆசிரியையான சித்ரா, தனது வீட்டின் முன்பு, `எனது வீட்டுக்குள் யாரும் வர வேண்டாம்' என்று எழுதி வைத்து, அசத்தியிருக்கிறார்.

எச்சரிக்கை வாசகங்கள்

Also Read: `ஒரு உயிரைக்கூட இழக்கக் கூடாது!' - கரூருக்காக இணையத்தில் நிதி திரட்டும் ஜோதிமணி எம்.பி

இதுகுறித்து, சித்ராவிடம் பேசினோம்.

``கொரோனா வைரஸின் கோரமுகம், படித்தவர்களுக்கே இன்னும் விளங்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியடைய வைக்கும் உண்மை. கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க இருக்கும் ஒரே ஆயுதம் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும்தான். ஆனால், அதை யாரும் செய்வதில்லை.

அதனால், வெளியில் போகவே அச்சமாக இருக்கிறது. அரசும், மருத்துவர்களும் இதை முற்றாக ஒழிக்க முடியாது. நாம் போதிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கொரோனா தொற்று பரவும் சங்கிலியை அறுத்தால்தான், கொரோனாவை வேரறுக்க முடியும். அதனால், எங்கள் பகுதி மக்களுக்கு என்னாலான விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தேன். அந்த வகையில், `என்னுடைய வீட்டுக்கோ, உறவினர்கள் வீட்டுக்கோ யாரும் செல்லவோ, வரவோ வேண்டாம். இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்று எழுதி வைத்துள்ளேன்.

அதோடு, லேசான காய்ச்சல், சளி இருந்தாலோ அல்லது கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ, கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் தெரிவிக்க, அரசு கொடுத்துள்ள தொடர்பு எண்களையும் அதில் குறிப்பிட்டுள்ளேன்.

எச்சரிக்கை வாசகத்துடன் சித்ரா

தவிர, இயற்கை முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்க ஏதுவாக, என்னென்ன பானங்கள், உணவுப் பொருள்கள், பழங்களை சாப்பிட வேண்டும் என்கிற பட்டியலையும் அதில் குறிப்பிட்டுள்ளேன். எங்கள் வீட்டை கடக்கும் பலரும், நின்று அதை படித்துவிட்டுப் போகிறார்கள்.

வரும் முன் காப்பதுதான் அனைத்து நோய்களையும் தடுப்பதற்கான வழி. கொரோனா வைரஸை பொறுத்தமட்டில், வரும் முன் காப்பது என்பது நமக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். கொரோனா வைரஸின் வீரியம் சொல்லமுடியாத தன்மையோடு இருக்கிறது. அதனால், நம்மை நாமே காத்துக்கொள்வோம்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3om39uV
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*