`பல வருஷ கஷ்டம், 2 வாரத்துல தீர்ந்துடுச்சு; விகடனுக்கு நன்றி!' - தொடரும் உதவிகள்; நெகிழும் தாத்தா

0

பேராவூரணி அருகே, பெற்றோர் இருவரும் மறைந்த நிலையில் அவர்களின் பிள்ளைகள் நிராதரவாகினர். தங்கள் பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துக் கலங்கித் தவித்த அவர்களின் தாத்தா, பாட்டி குறித்து கடந்த 15-ம் தேதி விகடன் தளத்தில், `பெற்றோர் மறைவு, வறுமையால் கலங்கும் பிள்ளைகள், உதவிக்காகக் காத்திருக்கும் தாத்தா, பாட்டி!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். வறுமையின் காரணமாகத் தங்கள் பேரப்பிள்ளைகளை வளர்க்க முடியாமலும், இடிந்த வீட்டைக்கூட சீரமைக்க முடியாமலும் தவித்த அந்த முதிய தம்பதிக்கும் அவர்களின் பேரப்பிள்ளைகளுக்கும், தற்போது உதவி கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் அந்தக் குடும்பமே நெகிழ்ச்சியடைந்துள்ளது.

பேரன் சக்திவேலுடன் சுப்ரமணியன்

பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (73). அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி அம்மாக்கண்ணு (60). விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களின் இளைய மகன் பழனிவேல் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். அவரின் மனைவி கோமதி. இவர்களுக்கு 10-ம் வகுப்புப் படிக்கின்ற சக்திவேல் என்ற மகனும், 6-ம் வகுப்புப் படிக்கின்ற சங்கவி என்ற மகளும் உள்ளனர். இருவரும் அரசுப்பள்ளியில் படித்துவருகிறார்கள்.

இந்நிலையில் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோமதியும், அவரை தொடர்ந்து பழனிவேலும் அடுத்தடுத்து உயிரிழக்க, பிள்ளைகள் இருவரும் ஆதரவின்றி தவித்தனர். சிறுவயதில் பெற்றோரை இழந்த கொடுமை ஒருபக்கம், வறுமை மறுபக்கம் என இரண்டும் சேர்ந்து தங்கள் பேரப்பிள்ளைகள் கலங்கி நிற்பதை பார்த்த அவர்களின் தாத்தா, பாட்டி, தள்ளாத வயதிலும் அவர்களை வாரியணைத்துப் பாதுகாக்கத் தொடங்கினர். குறிப்பாக, அரசுப் பள்ளியில் தற்காலிக வாட்ச்மேனாகப் பணிபுரிந்த சுப்ரமணியன் தன் பேரப்பிள்ளைகளை தாயைப்போல் அடைகாத்து வளர்க்கத் தொடங்கினார்.

சுப்ரமணியன் குடும்பத்திற்கு உதவி

Also Read: பெற்றோர் மறைவு, வறுமையால் கலங்கும் பிள்ளைகள்; உதவிக்காக காத்திருக்கும் தாத்தா, பாட்டி!

கஜா புயல் நேரத்தில் இடிந்து விழுந்த தன் வீட்டை சீரமைக்க முடியவில்லை, தன் மூச்சு அடங்கிய பிறகு பேரப்பிள்ளைகள் எதிர்காலம் என்னவாகும் போன்றவை சுப்ரமணியனின் பெரும் கவலைகளாக இருந்தன. தான் நடை, உடையாக இருக்கும்போதே பேரப்பிள்ளைகளுக்கு இருப்பதற்கு ஒரு நல்ல வீடும், எதிர்காலப் படிப்பிற்கு எந்த தடையும் ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடு ஏதாவதும் செய்ய நினைத்த சுப்ரமணியன், சில வருடங்களாகவே பலரிடமும் உதவிகள் கேட்டு அலைந்து சோர்வடைந்ததுதான் மிச்சம். பலன் எதுவும் கிடைக்கவில்லை.

சுப்ரமணியனின் நிலை குறித்து விகடனில் செய்தி வெளியிட்டோம். அந்தச் செய்தியிலேயே, இந்த முதிய தம்பதி, அவர்களின் பேரக்குழந்தைகளின் நலன் கருதி, `கஜா துயர்துடைப்போம்' திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுப்பது என்று ஆனந்த விகடன் குழுமத்தில் அறத்திட்டப்பணிகளுக்காக இயங்கிவரும் வாசன் அறக்கட்டளை முடிவெடுத்திருப்பது பற்றியும் தெரிவித்திருந்தோம். கட்டுரையைப் படித்த விகடன் வாசகர்கள் உருகியதுடன் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்ய முன்வந்தனர். இந்த முதிய தம்பதி மற்றும் பேரக்குழந்தைகளின் நிலை பற்றி தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவின் கவனத்திற்கும் சென்றது. சக்திவேல், சங்கவி நிலை குறித்து கண் கலங்கிய கோவிந்தராவ், அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.

சுப்ரமணியன்

மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் இவர்களைப் பற்றி கலெக்டர் சொல்ல, குழந்தைகளின் நிலையை உணர்ந்து வருந்திய அவர் உடனடியாக சுப்ரமணியனுக்கு உதவ முன்வந்தார். தொடர்ந்து, கொரோனா தடுப்புப் பணிகளின் ஆய்விற்காக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் பேராவூரணிக்குச் சென்றனர்.

அப்போது சுப்ரமணியன், அவரின் பேரப்பிள்ளைகளைச் சந்தித்து உதயநிதி அறக்கட்டளையின் சார்பில் ரூ 40,000 வழங்கினார் அமைச்சர். மேலும், `எந்தச் சூழலிலும் கலங்காதீங்க, உங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படும், படிச்சு பெரிய ஆளா வரணும்' என மகேஷ் பொய்யாமொழி அந்தப் பிள்ளைகளுக்கு நம்பிக்கையூட்டினார். இந்த வயதிலும் பேரப்பிள்ளைகளுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சுப்ரமணியனையும் பாராட்டினார். அப்பகுதியைச் சேர்ந்த பிரபல டாக்டர் நீலகண்டன், சக்திவேல் கல்லூரிப் படிப்பை முடிப்பது வரை ஆகும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

வீடு

சுப்ரமணியனிடம் பேசினோம்.

``உதவி கேட்டு ஏறாத படி இல்ல. ஆனா, இப்ப எல்லாம் வீடு தேடி வருது. ரூ.40,000 கொடுத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சார், ``கவலப்படாதீங்க, என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் செஞ்சு தர்றோம்"னு தெம்பூட்டினாரு. அந்தப் பணத்தை பேங்க்குல என் ரெண்டு பேரப்புள்ளைங்க பேருலயும் போடப்போறேன். நாங்க இருக்குற இடத்துக்கு பட்டா மாறுதல் தொடர்பா மனு கொடுத்திருந்தேன். அதை உடனே செஞ்சு தர்றதா கலெக்டர் கோவிந்தராவ் சார் சொல்லியிருக்கார். விகடன்ல இருந்து வீடு கட்டிக்கொடுப்பதா சொல்லியிருக்காங்க. சந்தோஷத்துல எனக்கு வார்த்தைகளே வரலை. பல வருஷ கஷ்டம் ரெண்டு வாரத்துல தீர்ந்துடுச்சு. எனக்கு மட்டுமல்ல, என் பேரப்பிள்ளைகளுக்கும் புது நம்பிக்கை ஏற்பட்டிருக்கு. விகடன்தான் இதுக்கெல்லாம் முழு காரணம். எங்க ஆயுசு இருக்குறவரை விகடனால கிடைச்ச இந்த உதவியை மறக்கமாட்டோம்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3z1IbWW
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*