நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் நெல்லை மாநகரப் பகுதிகளில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் வெளியில் சுற்றித் திரிந்தார்கள்.
நெல்லை மாநகர சாலைகளில் காவல்துறையினர் ஒன்பது இடங்களில் தடுப்புகள் அமைத்துக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சாலைகளில் சுற்றுபவர்களிடம் போலீஸார் கனிவுடன் பேசி அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனத் தெரிவிக்கிறார்கள். தொடர்ச்சியாக வெளியில் சுற்றித் திரிபவர்களை எச்சரித்து அனுப்புகிறார்கள்.
நெல்லை மாநகர போலீஸாரின் எச்சரிக்கையை மீறி அவசியம் இல்லாமல் வெளியில் சுற்றும் நபர்களுக்குக் கொரோனா பரிசோதனை நடத்த காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் முடிவு செய்தார். அதனால் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் சாலையோரங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நெல்லை சந்திப்பு, செல்லப்பாண்டியம் மேம்பாலம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக சாலைகளில் தேவையின்றி சுற்றுபவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 390 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் கூறுகையில், ``அவசியப் பணிகளுக்காகச் சாலைகளுக்கு வருவோரை போலீஸார் தடுப்பதில்லை. ஆனாலும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். யாராவது மாஸ்க் இல்லாமல் வருவது கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறையின் சார்பாக அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படுகிறது.
சிலர் அவசியம் இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரிகிறார்கள். அத்தகைய நபர்களால் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்தோம். அதன்படி பரிசோதனை நடத்தப்பட்டதில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களால் பிறருக்கு நோய்த் தொற்று பரவுவது தடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
நெல்லையைச் சேர்ந்த நம்பி என்பவர் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தலையில் கொரோனா தொப்பு அணிந்தபடி சாலைகளில் வலம் வருகிறார். தனி நபராக கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்ட அவருக்கு நெல்லை மாநகர காவல்துறையினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
சாலைகளில் அவசியம் இல்லாமல் வந்தால் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த நேரிடும் என்பதால் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவது குறைந்திருக்கிறது. தற்போது சாலைகளில் கூட்டம் குறைய நடவடிக்கை எடுத்த நெல்லை மாநகர காவல்துறையினருக்கு பொதுமக்களின் பாராட்டுக் குவிகிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3pmrx03
via
