வேலூர்: மலை உச்சியில் கண்டெடுக்கப்பட்ட 6 அடி நீள பீரங்கி... ஆங்கிலேயர் காலத்து ஆச்சர்யம்!

0

வரலாற்றுச் சிறப்புகள் அதிகமுள்ள நகரம், வேலூர். பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியை பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பிஜப்பூர் சுல்தான் ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர். 1606 தொடங்கி 1672 வரையில் விஜயநகர பேரரசின் தலைமையிடமாகவும் செயல்பட்டிருக்கிறது. தலைநகரைத் தோற்றுவிப்பதிலும், அரசுகளை உருவாக்குவதிலும் இம்மாவட்டத்தில் ஏறக்குறைய 200 ஆண்டுகளாகப் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

வேலூர் கோட்டை

1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி நள்ளிரவில், வேலூர் கோட்டையில் வெடித்த சிப்பாய் புரட்சிக் கலகம்தான் இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்தாக அமைந்தது. கி.பி 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டையை சுற்றி அமைந்திருக்கும் பிரமாண்டமான அகழியில் நீர் வற்றியதே இல்லை. கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக, கம்பீரமாக வீற்றிருக்கும் வேலூர் கோட்டையைப் பாதுக்காக்க வேலூரைச் சுற்றியுள்ள மலைக்குன்றுகளில் சிறிய கோட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சார்பனாமேடு பகுதியை ஒட்டியிருக்கும் மலை உச்சியிலுள்ள ராஜா, ராணி குளம் அருகில் மண் அரிப்பு ஏற்பட்டு ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி வெளிப்பட்டிருக்கிறது. அப்பகுதி இளைஞர்கள் சிலர், பீரங்கியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், அவர்களின் அனுமதி பெற்றப் பின்னரே பீரங்கி மீட்கப்படும் என மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட பீரங்கி

பீரங்கி சுமார் 6 அடி நீளமுடையதாக இருக்கிறது. 2018-ஆம் ஆண்டிலேயே வேலூர் கோட்டை வளாகத்தில் ஒரு பீரங்கியும், மூன்று குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டு தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு முன்பிருந்தே கோட்டை வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தில் இரண்டு பீரங்கிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, கண்டெடுக்கப்பட்டுள்ள பீரங்கியை மீட்டு உரிய முறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3g3iRXW
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*