வேலூர்: `நாங்கள் நிவாரண உதவிகள் வழங்குவதை தடுக்கிறார்!’ - திமுக எம்.எல்.ஏ மீது அதிமுக புகார்

0

வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், வேளாண் விற்பனைக் குழுத் தலைவருமான எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையிலான அ.தி.மு.க-வினர், கொரோனா ஊரடங்கில், நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்கள். அதேபோல், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுமார் இரண்டாயிரம் பேருக்குத் தலா பத்து கிலோ அரிசி மூட்டையை நிவாரணப் பொருளாக கொடுத்துவருகிறார்கள்.

தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயன்

இந்த நிலையில், நிவாரணப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயன் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ‘‘அ.தி.மு.க-வினர் வழங்கும் நிவாரண உதவிகளை யாரும் பெறக்கூடாது’’ என்று அதிகாரிகள் மூலம் தூய்மைப் பணியாளர்களை மிரட்டுவதாகவும் எம்.எல்.ஏ கார்த்திகேயன் மீது கடுகடுக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.

இந்தச் செயலை கண்டித்த அ.தி.மு.க-வின் இளைஞரணி மற்றும் ஐ.டி விங் நிர்வாகிகள் மீது காவல் நிலையங்களில் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் பொய்ப் புகார் கொடுத்து அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் அப்பு தலைமையிலான நிர்வாகிகள், தங்கள் கட்சியினருக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கக்கோரி வேலூர் எஸ்.பி செல்வகுமாரிடம் இன்று மனு கொடுத்துள்ளனர்.

புகாரளித்த அ.தி.மு.க நிர்வாகிகள்

புகார் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் அப்பு, ‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு உதவி செய்ய தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு மனமில்லை. அ.தி.மு.க செய்யும் உதவியையும் தடுக்கப் பார்க்கிறார். தூய்மைப் பணியாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் என தினந்தோறும் ஏராளமானோருக்கு நாங்கள் உதவுகிறோம். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்கள் கட்சியினர் மீது பொய்ப் புகார் கொடுக்க வைக்கிறார் எம்.எல்.ஏ கார்த்திகேயன். தி.மு.க-வினரின், இந்த அராஜகமிக்க பழிவாங்கும் நடவடிக்கையை அ.தி.மு.க சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்’’ என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3itMvbS
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*