சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பின்னர் அ.தி.மு.க கலகலத்து போயிருக்கிறது. கட்சியின் இரட்டைத் தலைமை தொடர்பாக தொண்டர்களிடம் கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையே இணக்கம் இல்லாதது போன்ற தோற்றமும் தொண்டர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.
Also Read: நெல்லை: `லாக்டௌன் முடியட்டும்..!’ - நம்பிக்கை அளித்த சசிகலா; உற்சாகத்தில் அதிமுக நிர்வாகி
இந்தச் சூழலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாகத் திகழ்ந்த சசிகலா, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் தொலைபேசி வாயிலாக கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பேசி வருவது அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையிலும் கட்சியை ராணுவக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்ததாக அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போது உள்ள இரட்டைத் தலைமையும் அவர்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளும் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாக தொண்டர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியை பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கும் போஸ்டர் நெல்லை நகரம் முழுவதும் இன்று ஒட்டப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மானூர் ஒன்றிய அ.தி.மு.க தொண்டர்கள்” என்ற பெயரில் ஓட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், “கட்சியின் செயல்பாடுகளில் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் எதையும் செய்யக் கூடாது. அப்படிச் செய்ததால்தான் தேர்தலில் தோற்றுப் போனோம். இனியும் தொடர்ந்தால் தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் குறித்து நெல்லை அ.தி.மு.க மாவட்ட செயலாளரான தச்சை கணேசராஜாவிடம் கேட்டதற்கு, “ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமான அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். ஜனநாயக இயக்கமான அ.தி.மு.க மீது கருத்து வேறுபாடு இருந்தால்கூட நேரில் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கும் நிலையில், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் யாரும் போஸ்டர் மூலம் குழப்பம் ஏற்படுத்த மாட்டார்கள்.
கடந்த சில தினங்களாக கட்சிக்குச் சம்பந்தமே இல்லாத சசிகலா, யாரெல்லாம் கட்சியில் இருந்து விலகிச் சென்றார்களோ அல்லது விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களிடம் பேசுவதாக தகவல்கள் வருகின்றன. அந்தக் குழப்பத்தின் தொடர்ச்சியாகவே இந்த போஸ்டர்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
போஸ்டர் அச்சிடப்பட்ட பிரஸ் பெயர் மற்றும் அதை அச்சிட்ட இயக்கத்தவரின் பெயர் இல்லாமல் அநாமதேயமாக வெளியாகியுள்ள இந்த போஸ்டர் மூலம் அ.தி.மு.க என்னும் பேரியக்கத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தி குளிர்காய சிலர் முயலுகிறார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” என்று தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3g8qqOy
via
