`உயிரைப் பணயம்வெச்சு பார்த்துகிட்டாங்க!' - செவிலியர்கள் பாதங்களில் பூ தூவிய வழக்கறிஞர்

0

நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் பணியில் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில், தனக்குச் சிகிச்சை அளித்த செவிலியர்களின் பாதங்களில் பூக்களைத் தூவி நன்றி தெரிவித்து அவர்களை நெகிழ வைத்துச் சென்றிருக்கிறார்.

அறந்தாங்கி அரசு மருத்துவமனை

கடந்த சில தினங்களுக்கு முன்பு அறந்தாங்கி அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் மணிமாறன், இருமல், மூச்சுத்திணறலுடன் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார். அப்போது, அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் தேவையான நேரத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுத்து மிகுந்த அக்கறையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதன் பலனாக 5 நாள்களில் குணமாகியிருக்கிறார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் செல்லத் தயாரான மணிமாறன், அருகிலேயே இருந்த பூக்கடையில் பூக்களை வாங்கி, தனக்குச் சிகிச்சை அளித்த இரண்டு செவிலியர்களையும் வரவழைத்து, அவர்களின் கால்களில் பூக்களைத் தூவி வணங்கி தனது நன்றியைத் தெரிவித்தார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத செவிலியர்கள் நெகிழ்ந்துபோயினர். தொடர்ந்து, அவருக்குச் செவிலியர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

வழக்கறிஞர் மணிமாறனிடம் பேசினோம். ``அரசு மருத்துவமனையில எப்படி பார்க்கப் போறாங்களோன்னு மொதல்ல பயத்தோடதான் போனேன். ஆனா, நடந்ததே வேற. அங்க பணியிலிருந்த செவிலியர்கள் அடிக்கடி உடல் நிலையை விசாரிச்சு மருந்து, மாத்திரை கொடுத்தாங்க. அன்னைக்கு ஒரு நாள் ஆக்சிஜன் லெவலைப் பார்ப்பதற்குள் தூங்கிட்டேன். இரவு வந்த அந்த செவிலியர் பொறுமையா என்னை எழுப்பி, ஆக்சிஜன் லெவலைப் பார்த்துக் குறிச்சுக்கிட்டு, `ஆபத்தில்ல, நல்லா இருக்கீங்க'னு நம்பிக்கை கொடுத்துட்டுப் போனாங்க.

செவிலியர்கள்

எல்லாத்தையும் விடவும், ரொம்ப ஆறுதல் கொடுத்தாங்க. இந்தக் கொரோனா சூழல்ல தங்களோட உயிரை பணயம் வெச்சு நமக்காக வேலைபார்க்கிறவங்களுக்கு என்னால பணம், பொருள் எல்லாம் கொடுக்க முடியாத நிலை. நம்ம நன்றியை எப்படியாவது அவங்களுக்கு வெளிப்படுத்தணும்னு நெனச்சுத்தான், அவங்க பாதங்களில் மலர்களைத் தூவினேன். என்னோட நன்றியை வெளிப்படுத்துனதில எனக்கு ரொம்ப மகிழ்ச்சி" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3g7BWJJ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*