கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதனை தடுத்தும் முயற்சியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில்...
``கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குழந்தை திருமணம் நடப்பது தொடர்பாக புகார்கள் வருகின்றன. அதாவது 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைகள் மற்றும் 21 வயது நிறைவடையாத ஆண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தால் அது குழந்தை திருமணம். குழந்தை திருமணம் செய்வதால் படிக்கும் பருவத்தில் கல்வி அறிவு தடைபடுவதுடன், தன்னம்பிக்கை குறைவு போன்றவையும் ஏற்படுகிறது.
மேலும் உடல்ரீதியாக பெண் குழந்தைகளுக்கு கருப்பையும் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. அதனால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதுடன், எடை குறைவான குழந்தை பிறப்பது, தாய் சேய் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ரத்தசோகை, மற்றும் உடலுடன் மனமும் பாதிப்படைவதால் பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக இப்படியான திருமணங்களால் பாலியல் பிரச்னைகள், கணவன் மனைவிக்கிடையே குடும்பப் பிரச்னைகள் ஏற்பட்டு தற்கொலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இளம் வயதிலேயே பல பெண்கள் கணவர்களை இழந்து நிற்கிறார்கள்.
குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன் படி ஒரு குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். இந்தக் குற்றம் புரிந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.7 லட்சம் அபராதமாக விதிக்கப்படும். அல்லது இரண்டு தண்டனைகளும் உண்டு. 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் குற்றவாளியாகியாகிறார். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள், குழந்தை திருமணம் நடத்தத் தூண்டியவர்கள், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், அச்சக உரிமையாளர்கள், மந்திரம் ஓதுபவர்கள் மண்டப உரிமையாளர்கள் உட்பட அனைவரும் குற்றவாளிகள்தான்.
எனவே குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக கிராம அளவில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் இருக்கும் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், காவலர்கள், அங்காடி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர் மற்றும் மாணவியர் அனைவரும் உங்கள் பகுதியில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும். உங்களது கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணம் பற்றிய தகவல்களை சைல்டு லைன் இலவச அழைப்பு எண் 1098 மற்றும் 04142-231235 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3z1piUb
via
