`போன் செய்தால் வீடு தேடி வரும் உணவு!' - பசி போக்கும் திட்டத்துக்கு கரூர் மக்கள் வரவேற்பு

0

`ஊரடங்கில் வீட்டில் இருக்கும் மக்கள் போன் செய்தால், போதும், அவர்களின் வீடுகளுக்கே வந்து உணவு கொடுப்போம்' என்று அறிவித்து, கரூர் மாவட்ட மக்களின் பசியைப் போக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக, இரண்டு பிரத்யேக தொடர்பு எண்களும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வரும் 7-ம் தேதி வரை தமிழகம் முழுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

உணவு வழங்கும் செந்தில் பாலாஜி

Also Read: `தப்பா எடுத்துக்காதீங்க; என் வீட்டுக்கு யாரும் வரவேண்டாம்!' -கரூர் ஆசிரியையின் விழிப்புணர்வு முயற்சி

இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது கரூர் மாவட்டத்தில், கரூர் சட்டமன்ற அலுவலகத்தில் `தளபதி கிச்சன்' என்ற திட்டத்தை தொடங்கி, தினமும் ஏழை மக்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கி வந்தார், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, ``கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. `இந்த ஊரடங்குக் காலத்தில் உணவுக்கு யாரும் பரிதவிக்காத வகையில் அவர்களின் பசியினைப் போக்கிடும் வகையில் தொடர்ந்து ஈடுபடவேண்டும், தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்' என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதை நிறைவேற்றும் வகையில், கரூர் மாவட்டத்தில் உணவு தேவைப்படும் ஏழை எளிய மக்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, `தளபதி கிச்சன்' மூலம் மூன்று வேளையும் உணவு தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு தேவைப்படுவோரின் வீட்டுக்கே சென்று இலவசமாக உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உணவுத்தேவைப்படுவோர் 9498747614, 9498747699 என்ற எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே 3,307 நபர்கள் உணவுத்தேவை என்று தெரிவித்தார்கள்.

உணவு வழங்கும் செந்தில் பாலாஜி

காலை உணவு தேவைப்படும் நபர்கள் முதல் நாள் இரவு 8 மணிக்குள்ளும், மதிய உணவு தேவைப்படும் நபர்கள் காலை 8 மணிக்குள்ளும், இரவு உணவு தேவைப்படும் நபர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் மேற்குறிப்பிட்ட எங்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட வேண்டும். குறித்த நேரத்தில் உங்கள் வீடுகளுக்கே வந்து உணவு வழங்கப்படும். ஊரடங்குக் காலம் முழுவதும் 3 வேளையும் உணவு தேவைப்படும் நபர்கள் ஒருமுறை தொடர்புகொண்டு தங்களுக்கு ஊரடங்கு முடியும் வரை 3 வேளை உணவு தேவை என்ற விபரத்தைத் தெரிவித்தால் போதும், ஒவ்பொரு முறையும் தொடர்புகொள்ளத் தேவையில்லை. தங்களின் தகவல்கள் குறித்துக்கொள்ளப்பட்டு குறித்த நேரத்திற்கு வீடுதேடி உணவு கொண்டு வந்து கொடுப்பார்கள்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க, யாரும் பசியால் வாடக்கூடாது, யாருக்கும் உணவில்லை என்ற நிலை வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் இத்திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாது, கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்தில் அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்குத் தொடர்ந்து மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

உணவு வழங்கும் செந்தில் பாலாஜி

அதேபோல், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள், கரூர் பாலம்மாள்புரத்தில் உள்ள மின் மயானத்தில்தான் எரியூட்டப்படும். இறந்தவர்களின் உடலை அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்து எரியூட்டி, அஸ்தியை அளிப்பது வரையில் மொத்த செலவுகளுக்கும் சேர்த்து ரூ.2,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், சில நாள்களுக்கு முன்பு இந்த எரியூட்டும் மையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பலருக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது. அதனால், இந்த மையம் கரூர் நகராட்சி நகர்நல அலுவலர் மேற்பார்வையில் இயங்கி வருகிறது. இந்த எரியூட்டு மையத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா உட்பட எரியூட்ட கொண்டு வரப்படும் உடல்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. காரணம், எரியூட்டுவதற்கான முழு செலவையும் செந்தில் பாலாஜியே ஏற்றிருக்கிறார். ``இந்த முயற்சியை, ஆரம்ப ஜோர் என்ற வகையில் நிறுத்திவிடாமல், தொடர்ந்து செந்தில் பாலாஜி செயல்படுத்தணும்" என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3plbjEt
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*