`மண்டைக்காடு கோயிலுக்குள் செருப்பு அணிந்து சென்றாரா விஜயதரணி?' - சர்ச்சையும் விளக்கமும்

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மூலஸ்தான மேற்கூரையில் கடந்த 2-ம் தேதி காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய கோயில் என்பதால் அரசியல் பிரமுகர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மண்டைக்காட்டுக்கு சென்று பார்வையிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.காந்தி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் விஜயதரணி ஆகியோர் மண்டைக்காடு கோயிலில் தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டனர்.

இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணிம் மண்டைக்காடு கோயிலுக்குள் செருப்புடன் நடந்து சென்று பார்வையிட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆதரவாளர்களின் முகநூல் குழுக்கள் மற்றும் பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களில் விஜயதரணி காலில் செருப்பு அணிந்தபடி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறைக்கு முன்புறம் நிற்பது போன்ற புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கோயில் முன்பு நிற்கும் விஜயதரணியின் காலில் செருப்பு இருப்பதாக வட்டமிட்டு வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம்.

அந்த புகைப்படத்துடன், "திருமதி விஜயதரணி அவர்களுக்கு,

மண்டைக்காட்டு பகவதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற அசம்பாவிதத்தை தாங்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினராக பார்வையிட சென்றீர்கள். என்றாலும், கோவிலுக்குள் செல்லும் போது, காலில் அணிந்திருக்கும் செருப்பை வாசலுக்கு வெளியே கழற்றி விட்டுதான் செல்ல வேண்டும் என்ற அடிப்படை நடைமுறையை தாங்கள் அறிந்து செயல்பட வேண்டும். தாங்கள் காலில் செருப்புடன் கருவறை அருகில் நிற்பதை போன்ற படம் ஒரு வாட்ஸ் அப் குரூப்-ல் வெளிவந்தது, வெந்த புண்ணில் வேல் கொண்டு பாய்ந்தது போல் உள்ளது. உங்கள் காலையும் உங்கள் அருகில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் காலையும் பாருங்கள்" என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபற்றி விஜயதரணி எம்.எல்.ஏ-விடம் பேசினோம், "நான் செருப்பை வெளியிலதான் கழட்டி போட்டுட்டு போனேன், வெளியே வந்த பிறகு செருப்பை மாட்டிகிட்டு போனேன். யாராவது இதுபோல பண்ணினா அந்த மண்டைக்காடு அம்மனே தண்டனை கொடுப்பாங்க. நாம கோயிலுக்கு வந்தேங்கிறதுக்காக நம்ம மேல குற்றச்சாட்டா. மனசாட்சியற்ற யாரோ இதை பரப்புறாங்க. அப்பிடி செருப்புப்போட்டுட்டு யாராவது போவாங்களா. கோயில் நிர்வாகத்துக்கிட்டயும் ஆகம விதிப்படி எல்லாம் பண்ணுங்க, தேவ பிரசன்னம் வச்சு நம்ம மாவட்ட வழக்கப்படி பண்ணணும்னு சொல்லிட்டு வந்திருக்கிறேன்.

விஜயதரணி செருப்பு அணிந்து கோயிலுக்கு போனதாக பரப்பப்படும் பதிவுகள்

நான் அன்றைக்கு போட்டிருந்தது வெள்ளை நிற செருப்பு. ஆனால், அந்த போட்டோவில் கறுப்பு நிறத்தில் தெரிகிறது. அங்க ஒரு கல்லு உடைஞ்சு இருந்துச்சு, அதுக்க மேல கால வச்சிருப்பேன். அது பாக்கிறதுக்கு செருப்பு போல தெரியுது. இதை பரப்பும் யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கிறேன், அவங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ என்பதால பா.ஜ.க காரங்க இப்பிடி பரப்புறாங்க. யாரா இருந்தாலும், எத்தனை பேராக இருந்தாலும் அவர்கள் மீது பல கோடி ரூபாய்க்கு மானநஷ்டஈடு வழக்கு போடுவேன்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3gaKDSt
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*