12 ஆண்டுக்குப் பிறகு பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட வைகை அணைத் தண்ணீர்; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

0

கேரள மாநிலம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி முதல் போகப் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இல்லாத காரணத்தால், அணையில் இருந்து ஜூன் 1-ம் தேதி தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் நிலவி வந்தது. இந்த ஆண்டு, `டவ்தே' புயல் மற்றும் `வளிமண்டல மேலடுக்கு சுழற்சி’யின் காரணமாகத் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

வைகை அணையில் நீர் திறப்பு

இதேபோல, முல்லைப் பெரியாறு அணையின் பல்வேறு நீர்பிடிப்புப் பகுதியிலும் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 130 அடி வரை உயர்ந்தது. இதன் காரணமாகவும் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் கடந்த 27-ம் தேதி 66 அடியை நெருங்கியது. வழக்கமாக 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம், 66 அடியை எட்டும்போது கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டும்போது, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும்போது மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில், வைகை அணையின் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிகை விடப்பட்ட நிலையில், வைகை அணையில் போதிய அளவு நீர்மட்டம் இருப்பு இருக்கும் நிலையில் முதல்போகப் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

வைகை அணையில் தண்ணீர் திறப்பு

இதையடுத்து ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும், என அரசுத்தரப்பில் கூறப்பட்டது. அதன்படி வைகை அணையில் இருந்து முதல் போகப் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தேக்கடி தலைமதகு பகுதியிலிருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதகை இயக்கி, தண்ணீரைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக அணையில் பூஜை வழிபாடு செய்யப்பட்டது.

அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்றனர். திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகின்றன. முதல் போக பாசனத்துக்காக விநாடிக்கு 200 கன அடி நீரும், குடிநீருக்காக விநாடிக்கு 100 கனஅடி நீரும் என மொத்தம் விநாடிக்கு 300 கனஅடி நீர் ஜூன் 4-ம் தேதி முதல் அடுத்த 120 நாள்களுக்கு திறந்து விடப்பட உள்ளது.

பாய்ந்தோடும் தண்ணீர்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ``12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையில் இருந்தும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும் ஜூன் மாதத்தில் முதல் போக சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையைத் தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு கடைமடை பகுதியான ராமேஸ்வரம் வரை வைகை அணை தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பது, மணல் திருட்டு உள்ளிட்டவை தவிர்கப்பட்டு நீர் நிலைகள் பாதுகாக்கப்படும். 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் ஆறுகளில் மணல் திருட்டு ஏதும் நடைபெறவில்லை” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uU8Gub
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*