திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் ஒரு குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு, திருவாரூர் மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் பத்தாண்டுகள் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட சேகரை, பகுதியைச்சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் விஜய். இருபத்திரெண்டு வயதான விஜய் கடந்த கடந்த 2019-ம் ஆண்டு, மே மாதம் 27-ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த, மூன்று வயதே நிரம்பிய பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு எழுந்தது. அச்சம்பவம் கூத்தநல்லூர் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பச்சிளம் குழந்தையிடம் கொடூரமாக நடந்துகொண்ட இளைஞர் விஜய் மீது காவல்துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுத்து, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்கள். அது தொடர்பாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 28.05.19 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த திருவாரூர் மகிளா நீதிமன்றம், இளைஞர் விஜய்க்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5000/ ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தீர்ப்பை தொடர்ந்து இளைஞர் விஜய்யை திருவாரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த , அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார். மேலும் இதுபோன்ற பாலியல் தாக்குதலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை பதிவாகியுள்ள அனைத்து போக்சோ வழக்குகளிலும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3CmWDKW
via
