தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ சமய திருமடங்களில் மதுரை ஆதீனம் மிக முக்கியமான ஒன்று. இந்த ஆதீனத்தின் 292-வது மடாதிபதியானார் குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் (77) . 1,500 ஆண்டிற்கு மேலான தொன்மை வாய்ந்த மதுரை ஆதீனத்தைத் திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். தற்போது இந்த மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாகப் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பல கோடி மதிப்பிலான சொத்துக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மடாதிபதியாக இருந்துவரும் அருணகிரிநாதர் வயது முதிர்வின் காரணமாகக் கடந்த 9-ம் தேதி உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரின் உடல் மோசமடைந்ததை அடுத்து மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கிவந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 77. இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தைச் சேர்ந்த அருணகிரிநாதர், மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக 27.5.1975-ல் பொறுப்பேற்றார். 291-வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் மரணம் அடைந்த பிறகு, 14.3.1980-ல் போட்டியின்றி மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார் அருணகிரிநாதர். அன்று முதல் அவருடைய பெயர் 292-வது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
Also Read: 10 நாட்களில் வீடு திரும்புவார் ஜெ., - மதுரை ஆதினம் ஆருடம்
ஆன்மிகப் பணிக்கு வருவதற்கு முன் தமிழ் மாலை நாளிதழில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆன்மிகப்பணியிலிருந்தாலும் அரசியல் விஷயங்களிலும் கருத்துச் சொல்லி வந்தார். 1980 ஆண்டிலிருந்து தொடர்ந்து 33 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பில் இருக்கும் அருணகிரிநாதர், சைவ நெறி பரப்புதலுக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பல நல்ல விஷயங்களைச் செய்து வந்துள்ளார். சுமார் ஆயிரம் கோயில்களில் இவர் தலைமையில் குடமுழுக்கு நடந்திருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3AAwdnc
via
