"ஆவின் நிறுவனத்தில் வேலை கன்ஃபார்ம். பணத்தை உடனே அனுப்புங்க" என்று கூறி, 5 பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்த 3 பேர் மீது, கரூர் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Also Read: `10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு!' - விவசாயியை ஏமாற்றியவர்களை 7 வருடம் கழித்து மடக்கிய போலீஸ்
திருச்சியில் ஆவின் பால் உற்பத்தி லிமிடெட் நிறுவனத்தில் மேலாளர் பதவி மற்றும் அதிக வேலைகள் கிடைக்கும் என தவறான உத்தரவாதத்தை நம்பி, கடந்த 2016 - ஆம் ஆண்டு கரூர் மாவட்டம், குளித்தலை வை.புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது: 43) ரூ 14 லட்சம் வரை ஏமாந்துள்ளார். அவரது உறவினர்கள் வேல்முருகன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரின் மூலமாக ஆவின் மேலாளர் வேலை வாங்கித் தருவதாக, குளித்தலை பெரிய பாலம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன் என்பவரிடம், அலாவுதீன் மனைவி அபிதா பேகம், மகன் ஜாகிர் உசேன் ஆகிய இருவரின் முன்னிலையில், ரூ. 14,00,000 பணத்தை சுரேஷ் கொடுத்துள்ளார். அதன்பிறகு, சுரேஷ் ஏமாந்ததோடு, அவரது சிபாரிசில் அவரது உறவினர்களான ஜெகதீசன், ரேவதி மற்றும் அவரது நண்பர்கள் ராஜகோபால், பெரியசாமி ஆகிய 4 பேருக்கும் வேலை வாங்கித்தருவதாக அலாவுதீன் சொல்லியதை நம்பி, அவரது வங்கிக் கணக்கில் ரூ .42,00,000 வழங்கியுள்ளனர்.
மொத்தமாக, ரூ.56 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் அலாவுதீன் கால தாமதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், திருச்சியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி லிமிடெட் நிறுவனத்தில் சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேர்களும் சென்று விசாரித்தபோது, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இந்நிலையில், சுரேஷ் நேற்று (ஆகஸ்ட் - 5) கரூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், அலாவுதீன் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிய ரசீதுகளை வைத்து புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அலாவுதீன், மற்றும் அவரின் மனைவி அபிதா பேகம், மகன் ஜாகீர் உசேன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 5 பேரை ஏமாற்றிய சம்பவம், குளித்தலைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3xnhfz7
via
