``அதிமுக ஆட்சியில் அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல்; விரைவில் நடவடிக்கை''- மா.சுப்ரமணியன்

0

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன், புதுக்கோட்டை மாத்தூர், கீரனூர் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கு நடைபெறும் தடுப்பூசி பணியையும் ஆய்வு செய்தார். இதையடுத்து, திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடியில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தையும் துவங்கி வைத்தார். தொடர்ந்து, திருமயம் அரசு மருத்துவமனை நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்வுகளில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுகளில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்ட 3 நாட்களிலேயே 25,617 பேர் பயனடைந்திருக்கின்றனர். தமிழகத்தில் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. மூன்றாவது அலை வந்தாலும் அதனைத் தடுக்க அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 98 சதவிகித மாற்றுத்திறனாளிகளுக்குத் தடுப்பூசியும், 60 சதவிகித கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி

இந்தியாவிலேயே அதிக கர்ப்பிணி பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட உள்ளன. இந்தியாவில் இதுவரை 18வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கவில்லை. அதே நேரத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் நல்ல முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். கடந்த ஆட்சியில் அதிக விலை கொடுத்து கொரோனா நோயாளிகளுக்கு உணவு வாங்கியது தடுக்கப்பட்டு தற்போது உரிய விலை கொடுத்து வாங்கியதன் மூலம் ரூ.20 கோடி மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது.

Also Read: `மொத்தம் 100 பேருக்கு குறி!’ - எஸ்.பி வேலுமணி ரெய்டு பின்னணி..!

பி.பி.இ கிட் ரூ.350லிருந்து ரூ.120க்கும், ரூ.90வரையிலும் பணம் கொடுத்து வாங்கிய N-95 முகக்கவசம் ரூ.22க்கு வாங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ உபகரணங்கள் இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியது தடுக்கப்பட்டுள்ளது. முறையான டெண்டர் விடப்பட்டு அனைத்துப் பொருட்களும் உரிய விலை கொடுத்து வாங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மருத்துவ உபகரணங்களை வாங்கியவர்களின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2XdFDGZ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*