மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் அதனை கைவிட வலியுறுத்தியும் தமிழக பிஜேபி சார்பில் தஞ்சாவூரில் பனகல் கட்டடம் எதிரே இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
போலீஸார் அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி போராட்டத்தை நடத்தியதால் தஞ்சாவூர் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதற்காக பெரிய கோயில் அருகே உள்ள சோழன் சிலையிலிருந்து உண்ணாவிரதம் நடைபெறும் இடம் வரை மாட்டு வண்டிப் பேரணி நடைபெற்றது.அண்ணாமலை மாட்டு வண்டியில் வர அவரைத் தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் வந்தனர். தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இதனைத் தொடங்கி வைத்தார். இதில் பாஜக மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Also Read: `கதை, திரைக்கதை, வசனம்... ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா!’ - சாடும் அண்ணாமலை
இதற்கு ஏற்பாடு செய்த மாநிலத் துணை தலைவரான கருப்பு. முருகானந்தம் 1,000ம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் போரட்டம் தொடங்கியதுமே பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த அண்ணாமலை கருப்பு.முருகானந்தத்தை மேடையிலேயே பாராட்டினார்.
போராட்டத்துக்கு வந்தவர்களை ஒரு சில இடங்களில் போலீஸார் தடுத்து நிறுத்தியதாக தகவல் வந்ததையடுத்து மேடையில் இருந்த நிர்வாகிகள் கொந்தளித்ததுடன் அறவழியில் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம் தயவு செய்து போலீஸார் யாரையும் தடுத்து நிறுத்தாதீர்கள் என கோரிக்கை வைத்தனர். மேடையில் பேசிய பலரும் திமுகவை விமர்சனம் செய்தனர்.
பின்னர் பாஜவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது, " தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்காக மாதந்தோறும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தும் அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடைய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஒரு ஆய்வு கூட்டத்தையாவது நடத்தியிருக்கிறார்களா? தமிழக முதல்வர் சாராயத்துறை அமைச்சரை தன் பக்கத்தில் வைத்துக்கொள்கிறார் ஆனால் விவசாயத்துறை அமைச்சரை தூரமாகவே வைத்துள்ளார். இதுவே தமிழக அரசின் செயல்பாடுகளை உணர்த்துவதற்கு ஒரு சான்று.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, எங்களது உண்ணாவிரத போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், பாஜகவுக்கு வயிற்றில் பிரச்சனை உள்ளது என கோழைத்தனமாகவும் கேவலமாகவும் பேசுகிறார், அவர் கட்சியை விட்டு, வீட்டுக்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. கமலஹாசன் சினிமாவில் நடிப்பதைப் பார்த்து கைதட்டி ரசித்திருக்கிறோம். தற்போது அரசியல் நடிப்புக்கு வந்துவிட்டார்.
மய்யம் என்று பெயர் வைத்துக்கொண்டு மய்யம் இல்லாமல் பேசி வருகிறார். வெயிலில் நின்று இதுபோன்ற ஒரு போராட்டத்தைக்கூட அவரால் நடத்த முடியாது. கர்நாடகாவில் உள்ள உதயா டிவி சேனல் கலாநிதிமாறன் உடையது. அவரது தம்பி தயாநிதிமாறன் பணத்தை வசூல் செய்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு மனசாட்சியே இல்லாததால் மக்களிடம் சாட்சி சொல்ல முடியாமல் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு உண்மையான பாஜகவை கொச்சைப்படுத்தினால், அவர்களது அனைத்து விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும். கர்நாடகாவில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என அனைத்து அமைப்பினரும் சேர்ந்து நாம் ஏன் கடிதம் எழுத வேண்டும், அனுமதி பெற வேண்டும் அதனை செய்யாமலேயே மேகக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று கூறிவருகிறார்கள்.
மேகேதாட்டுவில் அணை கட்டினால் கண்டிப்பாக தமிழக பாஜக எதிர்க்கும்,அங்கு அணை கட்டக்கூடாது என சட்டம் தெளிவாக இருப்பதால் கட்ட முடியாது.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகள் பட்டினிச்சாவு அதிமாக நிகழ்ந்தது.ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு விவசாயி கூட பட்டினியால் சாகவில்லை.இங்கு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்துள்ள கூட்டம் பிரியாணி பொட்டலங்களுக்கும்,டி-சர்ட்டுக்காகவும் வரவில்லை. விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அறப் போராட்டத்திற்காக வந்துள்ளனர். தமிழக அரசியலில் யாராவது பாஜகவை கொச்சைப்படுத்தினால், விடமாட்டோம் மீறி பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையை வைப்போம். அவர்கள் செய்யும் துரோகத்தை பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடி போல கொடுப்போம்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பாராளுமன்ற கூட்டத்தொடரில்,கர்நாடக எம்பி ஒருவர் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு எப்போது, மத்திய அரசின் அனுமதி வழங்கப்படும் என கேள்வி எழுப்பிய போது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்,மேக்கேதாட்டு திட்ட அறிக்கைக்கு, கடைமடை மாநிலமான தமிழகதத்தின் அனுமதி மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் ஒப்புதல் இல்லாமல்,மத்திய அரசு அனுமதி அளிக்காது என திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார். இதனால் மேக்கேதாட்டு பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது " எனத் தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jsNqrI
via
