கரூர்: 'புகார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை!'ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்கள்

0

புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற பெண்கள்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் அவரது மனைவி மல்லிகா. இந்த தம்பதியனருக்கு வாரிசு இல்லை. அதேபோல், உடல்நிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன் சமீபத்தில் இறந்துபோனார். மல்லிகா, பாலசுப்பிரமணியன் இருவரும் இணைந்து சொந்த உழைப்பில் வாங்கிய 17 ஏக்கர் நிலத்தை மல்லிகா உழுது விவசாயம் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

Also Read: மிரட்டிய போலீஸ்; ஆட்சியர் அலுவலகம் முன்பாகத் தீக்குளிக்க முயன்ற நபர்; நெல்லையில் பரபரப்பு!

மல்லிகாவுக்கு உதவியாக, இறந்த அவரது கணவர் பாலசுப்பிரமணியத்தின் உடன்பிறந்த சகோதரர் நீலமேகம் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் இணைந்து, ஒரே குடும்பமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாலசுப்பிரமணியன், நீலமேகம் ஆகியோரின் உடன்பிறந்த அண்ணன் வைத்தீஸ்வரனின் மகன் ஜெகதீஸ்வரன், மல்லிகாவை மிரட்டி அத்துமீறி அவரது தோட்டத்து வீட்டை உடைத்து குடியேறியதுடன், கடந்த ஓராண்டாக பல்வேறு இடையூறுகள் செய்து வருவதாக மல்லிகா தரப்பில் தொடர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மல்லிகா மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறிவந்தார். மாறாக, மாயனூர் காவல் நிலையத்தில் ஜெகதீஸ்வரன் அளித்த புகார் ஒன்றுக்கு, மல்லிகா மற்றும் வளர்மதி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ததுடன் ,ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முயன்ற பெண்கள்

இதுகுறித்து, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனுக்கு பாதிக்கப்பட்ட மல்லிகா தரப்பில் புகார் அளிக்கப்பட்டதால், ஆய்வாளர் பாலகிருத்திகா மாயனூர் காவல் நிலையத்திலிருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இதுகுறித்து குளித்தலை வருவாய் கோட்டாட்சியர், இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான், தொடர்ந்து ஜெகதீஸ்வரன் தரப்பு அடாவடியில் ஈடுப்பட்டு வருவதாகக்கூறி, மல்லிகாவும், வளர்மதியும், கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கிருந்த காவலர்கள், தற்கொலை செய்துகொள்ள முயன்ற இருவரையும் காப்பாற்றினர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு பெண்களும்,

"இரண்டு நாட்களுக்கு முன்பு மல்லிகா தோட்டத்தில் பயிரிட்டுள்ள சோளத்தட்டு பயிர்களை அழித்தும், தோட்டத்தில் ஏலத்துக்கு விடப்பட்ட தென்னை மரங்களில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேங்காய்களை பறித்தும் ஜெகதீஸ்வரன் அடாவடியில் ஈடுபட்டார். இதுகுறித்து, மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்திற்கு செல்லுமாறு கூறுகின்றனர். அங்கு சென்றால், மாயனூர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு கூறுகின்றனர் .தொடர்ந்து எங்களை இப்படி அலைக்கழிப்பு செய்த்ததால், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாங்கள் உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு பண்ணினோம். ஆனால், போலீஸ் எங்க முயற்சியை தடுத்துட்டாங்க. நாங்க விவசாயம் செய்துவரும் இடத்திற்கு உரிய அனைத்து ஆவணங்களும், உரிமையும் இருந்தும், நவடிக்கை எடுக்காத மாயனூர் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்க நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஜெகதீஸ்வரனிடமிருந்து நிலத்தையும், வீட்டையும் மீட்டுத்தரணும்" என்றார்கள்.

தற்கொலைக்கு முயன்ற பெண்கள்

இந்த நிலையில், மாயனூர் காவல்துறையைக் கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது சம்பந்தமாக, தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் மல்லிகா மற்றும் வளர்மதியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களின் மீது, IPC 385, 309, 353, 506 (ii) உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குபதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர். 'புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தான். நாங்க தீக்குளிக்க முயற்சித்தோம். ஆனால், எங்க பிரச்னையைத் தீர்க்காமல், எங்க மீது வழக்கு போட்டிருப்பது என்ன வகையில் நியாயம்?' என்று மல்லிகா தரப்பு கண்ணீர் மல்க கேட்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3imkQt2
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*