வேலூர் கஸ்பா வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் புஜ்ஜி என்கிற விக்னேஷ். வயது 24. பால் வியாபாரியான இவர்மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்ற விக்னேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை கஸ்பா சுடுகாட்டில், தலை, முதுகு, கைகளில் வெட்டுக் காயங்களுடன் கொலைச் செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்துச் சென்ற வேலூர் தெற்கு காவல் நிலையப் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், விக்னேஷின் நண்பர்களான கஸ்பாவைச் சேர்ந்த விஜயகுமார் (26), பெருமாள் நகரைச் சேர்ந்த விஷ்ணு (25), சுண்ணாம்புகாரத் தெருவைச் சேர்ந்த சுபாஷ் (20), கஸ்பா மசூதி தெருவைச் சேர்ந்த காஜா கவுஸ் மொய்னுதீன் (23), செல்வபுரத்தைச் சேர்ந்த நவீன் (20) ஆகிய ஐந்து பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் ஐந்துப் பேரும் சேர்ந்து விக்னேஷை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.
கொலை நடந்த இடத்தில்தான் விக்னேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து எப்போதுமே மது அருந்துவாராம். கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவும் 6 பேரும் கூட்டாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது, நண்பர்களில் ஒருவரான விஜயகுமார், தனது தங்கையை திருமணம் செய்துக்கொள்ளுமாறு விக்னேஷிடம் கூறியுள்ளாராம். அதற்கு மறுப்பு தெரிவித்த விக்னேஷ், அந்தப் பெண்ணின் நடத்தை குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கொதிப்படைந்த விஜயகுமார் விக்னேஷை தாக்கியுள்ளார். விக்னேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியைப் பிடுங்கிய விஜயகுமார், ‘‘என் தங்கச்சியவாடா தப்பா பேசுற’’ என்றுகூறி சரமாரியாகக் குத்தியுள்ளார். தாக்குதலில் நிலை குலைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார். இந்த கொலைக்கு அங்கிருந்த நண்பர்கள் நான்குப் பேரும் உடந்தையாக இருந்தததும் விசாரணையில் தெரியவந்தது. கொலை வழக்காகப் பதிவு செய்தப் போலீஸார், விஜயகுமார் உட்பட 5 பேரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3k7MIkb
via
