கும்பகோணம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாளுக்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை திமுக-வை சேர்ந்த சிலரே கிழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோஷ்டி பூசலால் நடந்த இந்த சம்பவம் குறித்து தலைமை வரை புகார் சென்றுள்ளது. பிளக்ஸ் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக விசுவாசிகள் கூறியுள்ளனர்.
பாபநாசம் அருகே உள்ள பண்டாரவடை பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். திமுக பிரமுகரான இவர், கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதியில் செய்து வருகிறார். இந்நிலையில் பாபநாசம் அரசு மருத்துவமனை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளுக்காக மெகா சைஸ் பிளக்ஸ் போர்டு ஒன்றை வைத்திருந்தார். கோஷ்டி பூசலால் தி.மு.க-வை சேர்ந்த ஒரு தரப்பினர் பிளக்ஸ் போர்டை கிழித்து விட்டனர். கருணாநிதி படம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் பிளக்ஸ் கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி திமுக-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திமுக-வினர் சிலரிடம் பேசினோம், `தஞ்சாவூர் தி.மு.க-வில் வடக்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட பண்டாரவடையில் வசிப்பவர் நவநீத கிருஷ்ணன். இவர் கட்சியில் உறுப்பினர் தான் என்றாலும் செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார். பொறுப்பில் இல்லாவிட்டாலும் முதலமைச்சர் ஸ்டாலின் எண்ணத்திற்கேற்ப அவர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இதனை வடக்கு மாவட்ட பொறுப்பாளரான கல்யாணசுந்தரம் பல முறை பாராட்டியும் இருக்கிறார்.
இந்நிலையில் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளுக்காக `செம்மொழி நாயகரே நினைவு நாளில் வணங்குகிறோம்’ என்ற வாசகத்துடன் கருணாநிதி படம் போட்டு பிளக்ஸ் போர்டு வைத்தார். கடந்த 7-ம் தேதி கருணாநிதியின் நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் நினைவு கூரப்பட்டது.
ஆனால் பாபநாசத்தில் திமுகை சேர்ந்த சிலர் கருணாநிதி நினைவு நாளுக்காக வைத்திருந்த பிளக்ஸ் போர்டை கிழித்தனர். இதனை பார்த்த திமுக விசுவாசிகள் சிலர் முன்னாள் தலைவர் கருணாநிதி படம் இருக்கு கிழிக்காதீங்கனு கத்தியுள்ளனர். ஆனால் பிளக்ஸை கிழித்த ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டே எதையும் காதில் வாங்காமல் முழுமையாக கிழித்தார். இதனால் அந்த இடமே பரபரப்படைந்தது.
இந்த தகவல் மாவட்ட பொறுப்பாளர் கல்யாணசுந்தரத்திற்கு சென்றது. நவநீதகிருஷ்ணனிடம் பேசிய அவர், `பொறுமையாக இருங்க பேசிக் கொள்ளலாம்’ என சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் இப்பிரச்னை திமுக தலைமை வரை சென்றுள்ளது. கட்சியில் பொறுப்பில் இல்லை என்றாலும் உறுப்பினர் என்கிற முறையில் தொடர்ந்து ஈடுபாட்டோடு கட்சி பணிகளை ஆர்வமுடன் செய்வதை காழ்ப்புணர்சியின் காரணமாக ஏற்று கொள்ள முடியாமல் சிலர் இதனை செய்துள்ளனர். அதே போல் நவநீத கிருஷ்ணன் அச்சடித்த போஸ்டரை பாபநாசம் ஒன்றியம் முழுவதும் ஒட்டவிடாமல் பிரச்னை செய்து தடுத்துள்ளனர்’ எனத் தெரிவித்தனர்.
Also Read: 63 ஆண்டுகள் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீடு - ஒரு ரவுண்ட்அப்!
நவநீதகிருஷ்ணனிடம் பேசினோம், `நான் வைத்த பிளக்ஸ் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் இருப்பதை பார்த்து அதற்கு உரிய மரியாதையினை கொடுக்காமல் கிழித்திருப்பது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது’ என்பதோடு முடித்து கொண்டார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3CEssiH
via
