இந்தியாவின் பிற மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை குறைந்துவந்த நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் தினசரி கொரோனா பாசிட்டிவ் பாதிப்பில் 50 சதவிகிதத்துக்கும் மேல் கேரள மாநிலத்தில் பதிவானது. சில சமயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி கொரோனா பாதிப்பு கேரளத்தில் பதிவானது. கடந்த ஆகஸ்ட் மாதம் தினசரி புதிய கொரோனா பாதிப்பு 20,000க்கும் மேல் சென்றது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 30,000-தைக் கடந்து அச்சுறுத்தியது. இதனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த கேரள அரசு பல கட்ட முயற்சிகளை எடுத்தது. அதன் ஒருபகுதியாக அரசு மதுக்கடைகளுக்கு மது வாங்க வரும் குடிமகன்கள் ஒரு டோஸ் வேக்ஸின் எடுத்துக்கொண்ட சான்றிதழ் அல்லது ஆர்.டி-பி.சி.ஆர் டெஸ்ட் நெகட்டிவ் சான்றிதழுடன் சென்றால்தான் மது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது மளிகை கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்பவர்களுக்கும் இதே நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
Also Read: மக்கள் தொகையில் சரி பாதி பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி; அசத்தும் கேரளா!
கடந்த மாதம் இறுதியில் கொரோனா புதிய பாதிப்புகள் மெல்ல குறைந்து 20,000 என்ற நிலையை அடைந்தது. இதையடுத்து இரண்டு டோஸ் வாக்சின் எடுத்துக்கொண்டவர்கள் பார்களிலும், ஓட்டல்களிலும் உள்ளே அமர்ந்து சாப்பிடலாம் என்ற புதிய அறிவிப்பை கேரள அரசு வெளியிட்டது. மேலும் இரண்டு டோஸ் வாக்சின் செலுத்திக்கொண்ட தொழிலாளர்களை மட்டுமே ஓட்டல்களிலும், பார்களிலும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஓட்டல் மற்றும் பார்களில் ஐம்பது சதவிகிதம் இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் கேரள அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் இண்டோர் ஸ்டேடியம், நீச்சல் குளங்கள் திறக்கலாம். அதில் பயிற்சி அளிப்பவர்களும், பயிற்சி எடுத்துக்கொள்பவர்களும் இரண்டு டோஸ் வாக்சின் எடுத்துக்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் கேரள அரசு அறிவித்தது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கான முன் நடவடிக்கைகளையும் எடுத்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கொரோனா பாதிப்பு 10,000 -க்கும் குறைவானது.
கடந்த 3-ம் தேதி நிலவரப்படி 12,293 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 16,333 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று முன் தினம் 8,850 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 17,007 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 9735 பேருக்கு புதிதாக தொற்று ஏறட்டுள்ளது. அதே சமயம் 13,878 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று 151 பேர் மரணமடைந்த நிலையில் மரண எண்ணிக்கை 25,677 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் முழுவதும் மொத்தம் 1,24,441 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவதுகின்றனர். புதிய பாதிப்புக்கள் குறைந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்தால் கேரளத்தில் கொரோனா தீவிரம் விரைவில் குறையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3FpDl94
via
