காந்தி ஜெயந்தி விழா: 130 வகையான பொருள்கள்... பொது மக்களை கவர்ந்த ஆளில்லா கடை!

0

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நாடு முழுவதும் 153-வது காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டபடும் வேளையில் பொதுமக்களிடையே நேர்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தஞ்சாவூர் அருகே ரோட்டரி சங்கம் சார்பில் ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களை எடுத்து கொண்டு அதற்குரிய பணத்தை தாங்களாகவே கல்லாப் பெட்டியில் வைத்து செல்லும் வகையில் கடை திறக்கப்பட்டுள்ளது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பாபநாசத்தில் திறக்கபட்ட ஆளில்லா கடை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தைகள், பொது மக்கள் மனதில் நேர்மையை விதைக்கும் விதமாகவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் `ஹானஸ்ட் ஷாப்’ என்கிற பெயரில் காந்தி ஜெயந்தி நாளில் மட்டும் ஆளில்லா கடையை திறந்து நடத்துவது வழக்கம். அதன்படி 22-ம் ஆண்டு ஆளில்லா கடையினை இன்று திறந்தனர்.

பாபநாசம் அரசு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்தில், ஸ்டால் அமைத்து ரூ 12,000 மதிப்புள்ள நோட்டு புத்தகம்,பென்சில்,பேனா போன்ற ஸ்டேஷனரிஸ் பொருள்கள், சாக்லெட், பிஸ்கட், சோப்பு, பவுடர், ஷாம்பு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் மற்றும் காந்தியின் சத்திய சோதனை உள்ளிட்ட புத்தகங்கள் என மொத்தம் 130 வகையான பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தனர். ஒவ்வொரு பொருளுக்குறிய விலைப்பட்டியலும் அந்தந்த இடத்தில் எழுதி வைத்திருந்தனர். பொருளுக்கான பணத்தை வைப்பதற்காக கல்லாப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திறக்கபட்ட ஆளில்லா க்டை

பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களை எடுத்து கொண்டு பணத்தை கல்லாப்பெட்டியில் வைத்து சென்று விட வேண்டும்.எந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாகவே ஆளில்லா கடை நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் சில ஆண்டுகள் பொருள்கள் முழுவதும் விற்பனை ஆகியிருந்தாலும், பணத்தை கணக்கிடும் போது பணம் குறைவாகத்தான் இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பொருளின் மதிப்பை விட பணம் கூடுதலாகவே இருக்கும். எதற்காக ஆளில்லா கடையினை திறந்தோமோ அந்த நோக்கம் வெற்றி பெற்றுள்ளது என்பது இதில் முத்தாய்ப்பான விஷயம் என ரோட்டரி சங்க நிர்வாகிகள் பெருமிதத்துதுடன் கூறி வருகின்றனர்.

Also Read: காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு #GandhiJayanti

ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி ஆளில்லா கடையை திறக்க, பாபநாசம் போலீஸ் டிஎஸ்பி பூரணி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்துடன், காந்தியைப் போல நாம் அனைவரும் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ வேண்டும் என்றார். இது குறித்து பாபநாசம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கூறுகையில், ``காந்தி மகான், மக்கள் எந்த வேறுபாடின்றி ஒற்றுமையையும், நேர்மையையும் கடைபிடித்து தீய செயல்களில் ஈடுபடாமல் அன்பு செய்வதையே ஆயுதமாக கொண்டு வாழ வேண்டும் என நமக்கெல்லாம் வழிகாட்டியுள்ளார்.

பேருந்து நிலைய ஆளில்லா கடையில்

அதன்படி அவருடைய பிறந்த நாள் விழாவான காந்தி ஜெயந்தி நாளில் ஹானஸ்ட் ஷாப் என்கிற பெயரில் ஆளில்லா கடையினை திறந்து செயல்படுத்தி வருகிறோம். இதில் மொத்தம் ரூ 12,000 மதிப்பிற்கு பொருள்கள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை எடுத்து கொண்டு அந்த பொருளுக்குறிய பணத்தை வைத்து விட்டு செல்லலாம். அவர்கள் விரும்பினால் பொருளின் விலையை விட கூடுதலாகவும் வைத்து செல்லலாம். இதில் வரும் பணத்தினை ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக பயன்படுத்தி வருகிறோம். ஹானஸ்ட் ஷாப்பிற்கு வருவதுடன் நேர்மையாக நடந்து செல்கின்ற மக்களுக்கு ராயல் சல்யூட்” எனத் தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3iqUNQM
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*