மூன்றாவது திருமணத்திற்காக பெற்ற குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்ற தாய்! - தூத்துக்குடி அதிர்ச்சி

0

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபமலர் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிகளுக்கு, அதிவீரமான் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக இத்தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெபமலருக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், திருமணத்திற்கு அவரது குழந்தை தடையாக இருப்பதாக நினைத்த ஜெபமலர், அவரின் பெற்றோரும் குழந்தையை விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

குழந்தையை விலைக்கு வாங்கிய செல்வமணி, புரோக்கர் கார்த்திகேயன்

இதையடுத்து ஜெபமலர், தாய் கிருபா, தந்தை செல்வராஜ், அவரின் சகோதரர் அந்தோணி, தாய்மாமா டேனியல் ஆகியோர் கல்யாண புரோக்கரான ஜேசுதாஸ் என்பவரை அணுகியுள்ளனர். அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள ரெட்டியார்பட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மூலமாக குழந்தையை விற்பனை செய்ய பேசி முடித்துள்ளனர். அதன்படி, கடந்த 24-ம் தேதி குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்துள்ளனர்.

தன் குழந்தை விற்பனை செய்த தகவலை அறிந்த மணிகண்டன், 28-ம் தேதி தனது குழந்தையை மீட்டுத்தருமாறு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள மேலச்சூரங்குடியைச் சேர்ந்த செல்வமணி, ஸ்ரீதேவி என்ற குழந்தையில்லாத் தம்பதிகளுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, செல்வமணி, ஸ்ரீதேவி மற்றும் அவர்களுக்கு உதவிய ராஜபாளையத்தைச் சேர்ந்த புரோக்கர் கார்த்திகேயன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி ஜெயக்குமார்

அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தை, தந்தை மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை விற்பனை செய்த தாய் ஜெபமலர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., ஜெயக்குமார், “மணிகண்டன், ஜெபமலர் இவர்கள் இருவருமே ஒருவரையொருவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவர்கள். குழந்தை பிறந்தபிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

Also Read: நீலகிரி: வாட்டிய வறுமை.. 3 குழந்தைகளையும் விற்ற பெற்றோர்! - ஊட்டியை உறையவைத்த குழந்தை விற்பனை

ஜெபமலருக்கு மூன்றாவதாகத் திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர் முடிவு செய்ததால், அதற்கு 9 மாத குழந்தை தடையாக இருக்கும் என நினைத்து புரோக்கர்கள், ஜேசுதாஸ், கார்த்திகேயன் ஆகியோர் மூலமாக குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இதில், புரோக்கர்கள் இருவரும் தங்களின் கமிஷனாக ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ரூ.2.50 லட்சத்திற்கு நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தையில்லாத் தம்பதிக்கு விற்பனை செய்துள்ளனர். தற்போது குழந்தை தந்தை மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

குழந்தையின் தந்தை மணிகண்டன், “கணவர் மனைவிக்கு இடையில கருத்து வேறுபாடு வர்றது வழக்கமானதுதான். கருத்துவேறுபட்டாலதான் நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்தோம்.

மீட்கப்பட்ட குழந்தையுடன் மணிகண்டன்

என்னோட வாழ விருப்பம் இல்லேண்ணா எங்கிட்ட ஓப்பனா சொல்லியிருக்கலாம். வேறு கல்யாணம் செய்யுறதுக்காக இப்படி பெத்த குழந்தையை விற்கலாமா? அந்தப் பிஞ்சுக்குழந்தை என்னப் பாவம் செஞ்சுச்சு? எங்கிட்டயாவது குழந்தையை ஒப்படைச்சுருக்கலாம். குழந்தையை விற்று அந்தப் பணத்தின் மூலமாக ஆடம்பர வாழ்க்கை வாழ நினைச்ச என் மனைவியையும், அவளோட குடும்பத்தினருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்” என்றார் ஆவேசத்துடன்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3A9fUgM
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*