தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு யுவராணி, நித்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். யுவராணி, கல்லூரியில் 2-ம் ஆண்டும், நித்யா 12-ம் வகுப்பும் படித்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 10 ஆண்டுகளுக்கு முன்பே முத்துராமன் பிரிந்து சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், முத்துமாரி கூலி வேலை செய்து மகள்களை படிக்க வைத்து வருவதுடன் வாடகை வீட்டில் குடும்பத்தையும் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி காலையில் முத்துமாரியின் தாயார் கோமதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு, உள்புறமாகப் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் கதவுகள் திறக்கப்படாததால் ஜன்னல் வழியே வீட்டிற்குள் பார்த்துள்ளார் கோமதி. அப்போது, வீட்டிற்குள் இரண்டு பேத்திகளும் தூக்கியில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.
சத்தம் கேட்டு, அருகில் இருந்தர்கள் அங்கு வந்தனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சமையலறையில் தன் மகள் முத்துமாரியும் தூக்கில் தொங்கியுள்ளதைப் பார்த்து மேலும் கதறி அழுதுள்ளார் கோமதி. தாய், மகள்கள் என மூன்று பேரும் கொலை செய்யப்பட்டனாரா அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சொத்துப் பிரச்னையால் முத்துமாரி, தன் மகள்களுடன் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. “முத்துமாரியின் தந்தை தேவராஜ், அவருக்குச் சொந்தமான வீட்டை முத்துமாரிக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த வீட்டில் குடியிருந்த முத்துமாரியின் தம்பி ஆண்டவர், வீட்டைக் காலி செய்யாததுடன், ’வீட்டை உனக்கு தர முடியாது. அந்த வீடு எனக்குதான்’ எனச் சொல்லி அக்கா முத்துமாரியிடம் கூறினாராம்.
இதையடுத்து முத்துமாரி வீட்டை மீட்டுத்தருமாறு போலீஸாரிடம் ஏற்கெனவே புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து வீட்டுப் பிரச்னை தொடர்பாக ஆண்டவர் அக்கா முத்துமாரியிடம் அடிக்கடி சண்டை போடுவாராம். மூவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்புகூட முத்துமாரி போலீஸில் கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறச்சொல்லி ஆண்டவர் கடுமையான வார்த்தைகளால் பேசி சண்டை போட்டாராம்.
இதனால், முத்துமாரி மனமுடைந்த நிலையில் இருந்ததாகவும், அவமானம் தாங்காமல் மகள்களுடன் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனால், தற்கொலைக்கு தூண்டியதாக முத்துமாரியின் தம்பி ஆண்டவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3oUP4qv
via
