`இங்கு மறுமணங்கள் நிச்சயிக்கப்படும்!' - திருவாரூரில் நடக்கவிருக்கும் முன்மாதிரி சுயம்வரம்

0

மணமகன், மணமகள் தேடுபவர்களை ஒன்றாக ஒரே இடத்தில் சந்திக்க வைத்து, அவரவருக்குப் பிடித்த இணைகளை அமைத்துக்கொள்ளக்கூடிய சுயம்வர நிகழ்ச்சிகள் சமீபத்தில் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவாரூரில் சற்று புதுமையான, அதே நேரம் உயர்ந்த நோக்கத்தோடு, ஏற்கெனவே திருமணமாகி கணவனை இழந்த பெண்களுக்கும், மனைவியை இழந்த ஆண்களுக்கும் மீண்டும் மணவாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கான மறுமண சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அக்டோபர் 16-ம் தேதி சனிக்கிழமை, திருவாரூரில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Marriage (Representational Image)

Also Read: ``மறுமணத்துக்கு முதல்ல அனுமதி கேட்டதே என் பையன்கிட்டதான்!" - மறுமணம் குறித்து சுபாஷினி

திருவாரூர் ரோட்டரி சங்கம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு சென்று சேரும் வகையில் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, மறுமணத்திற்கு இணை தேடுபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான சுயம்வரத்திற்கு எற்பாடு செய்துள்ள திருவாரூர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் தியாகபாரியிடம் பேசினோம்.

``எங்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு இது. வழக்கமான நிகழ்வுகளாக இல்லாமல், சமூகத்திற்கு மிகவும் பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே மறுமண சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம். கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட, விவகாரத்துப் பெற்ற பெண்களுக்கும், மனைவியை இழந்த ஆண்களுக்கும், மீண்டும் மணவாழ்க்கை அமைய மாப்பிள்ளை, பெண் கிடைப்பதென்பது சிலருக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. இயல்பான மணவாழ்க்கைக்கு மாப்பிள்ளை, பெண் தேடுபவர்கள் போல், இவர்களில் சிலரால் வெளிப்படையாக உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லி வைத்து தேட முடிவதில்லை. பொருளாதாரச் சூழல், படிப்பு, வேலை, குடும்பச் சூழல் உள்பட பல அம்சங்களும் பொருந்தக்கூடிய துணையைத் தேடிக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறார்கள்.

தன் மறுமண வாழ்க்கைக்குத் துணை தேடக்கூடிய ஒவ்வொருவருக்கும் பொருத்தமான ஒருவர் எங்கோ ஓரிடத்தில் நிச்சயம் இருப்பார். ஆனால் அது யார் என்பதும், எங்கு இருக்கிறார் என்பதும்தான் தெரியாது. நாங்கள் ஏற்பாடு செய்துள்ள மறுமண சந்திப்பு நிகழ்ச்சி, நிச்சயம் இவர்களுக்குக் கை கொடுக்கும். அக்டோபர் 16-ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வில் சுமார் 500 பேர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், தங்களது ஜாதகத்தோடு இந்நிகழ்வில் பங்கேற்பார்கள். ஒவ்வொருவரையும் மேடையில் ஏற்றி, விரிவான தகவல்களுடன் அறிமுகம் செய்யவுள்ளோம். பிடித்திருந்தால், அங்கேயே அவர்கள், அவர்களது குடும்பங்கள் சந்தித்துப் பேசி முடிவுக்கு வருவார்கள்.

Marriage - Representational Image

Also Read: முதல் மணம் தோல்வி... மறுமணம் செய்ய பயம்... கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன? #LetsSpeakRelationship

மேலும், துணையைப் பிடித்திருக்கும் பட்சத்தில், அவர்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படக்கூடியவர்களாக இருந்தால், அவர்களுக்கு எங்களது ரோட்டரி சங்கமே திருமணத்தை நடத்தி வைக்கும். எங்களது ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஐந்தாவது முறையாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சிகளில், பல திருமணங்கள் நிச்சயக்கப்பட்டு நடந்தேறின, பல ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இம்முறையும் அப்படி பல ஜோடிகள் வாழ்வில் இணைய விரும்புகிறோம்'' என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mKubLQ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*