திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் விஐபி தரிசனமுறை ரத்து!

0

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும் கடற்கரைத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாள்கள், விசேச நாள்கள் மற்றும் திருவிழா நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். தற்போது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இக்கோயிலில் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பொது தரிசனத்திலும் ரூ.250, ரூ.100, ரூ.20 ஆகிய கட்டண தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில், கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள், சுமார் 5 முதல் 6 மணி நேரம் வரை காத்திருப்பதாக பக்தர்கள் புகார் கூறி வந்தனர்.

ரத்து செய்யப்பட்ட நேரடி தரிசன வழி

’திருச்செந்தூர் கோயிலில் திருப்தியாக தரிசனம் செய்ய முடியவில்லை. ஸ்டாலின் சார், சேகர்பாபு சார் எதாவது செய்யுங்க’ என பெண்கள் சிலர் பேசிய புகார் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் உள்துறை அதிகாரிகளை சென்னை வரவழைத்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனிடையே கடந்த 28-ம் தேதி முதல் பக்தர்கள் நேரடி தரிசனத்திற்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்கள் யாரும் நுழைய முடியாத வகையில் சுற்றி பேரிகார்ட் வைத்து தடுப்பு வேலிகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் பரிந்துரை கடிதங்கள் மற்றும் வி.ஐ.பி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், ரூ.250 வரிசையில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். நேரடியாக கேட் திறந்து தரிசனத்திற்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கடந்த குறிப்பிட்ட நாள்களில் நீதிபதிகள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு மட்டுமே நேர் கேட் திறக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பொது தரிசன வழி

உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோர், பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியேறும் பாதையில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனத்திற்கு வந்த போது, அவருக்கும் நேர் கேட் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் பின்வாசல் வழியாகவே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துத் தற்போது பலமடங்கு பெருகிவிட்டது. குறிப்பாக அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வரிசையில் சென்றால் அவசரத்திற்கு கூட வெளியே வர முடியாத நிலைதான் உள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் திருப்பதி கோயிலில் உள்ளதைப் போல அமர்ந்து செல்லும் வகையில் வரிசை முறையை மாற்றியமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தரிசன வரிசை

கோயில் நிர்வாக வருமானத்தை மட்டும் கணக்கீடு செய்யாமல் குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதை ஆய்வு செய்து அதற்குரிய வழிவகை கண்டறிய வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக மூன்று நேர அபிஷேகத்தின் போது வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வைப்பதை முன்கூட்டி தடுத்து கோயிலுக்கு வெளியே அவர்களை அமர வைத்தால் மட்டுமே பக்தர்கள் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருக்கும் நிலையை மாற்ற முடியும் என்கின்றனர் பக்தர்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3l3aWO5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*