திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், குரு பகவானுக்குச் சிறப்பு வாய்ந்த திருத்தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி நாளன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கூடுவது வழக்கம். இங்கு நடைபெறும் லட்சார்ச்சனை விழா மிகவும் புகழ்பெற்றது.
கடந்த ஆண்டு குருப்பெயர்ச்சி நாளன்று, கொரோனா பரவலின் காரணமாக, இங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்நிலையில்தான் இந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி இங்கு நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சி விழா மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் திருகோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தலமாகும். நவகிரகங்களில் ஒன்றான குருபகவானுக்குரிய தலமாக இது திகழ்கிறது. ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி நாளில் இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, மிகவும் கோலாகலமாக, குருப்பெயர்ச்சி விழா நடைபெறும். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி நவம்பர் 13-ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.
இங்கு நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சி விழாவுக்கான முன்னேறுபாடுகளை இக்கோயிலின் நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இங்கு நடைபெறவுள்ள லட்சார்ச்சனை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள இந்தக் கோயில் தக்காரும் உதவி ஆணையருமான செ.சிவராம்குமார் மற்றும் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான பி.தமிழ்ச்செல்வி,
‘’அனைத்து ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனைக் கட்டணமாக 400 ரூபாய் செலுத்துபவர்களுக்கு, குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும். காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வரைவோலை அல்லது மணியார்டர் மூலம் தொகை அனுப்புபவர்கள் உதவி ஆணையர், செயல் அலுவலர், ஆபத்சகாயேஸ்வரர் கோவில், ஆலங்குடி, வலங்கைமான் வட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரைவோலை எடுப்போர் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2YBH439
via
