`பாம்பின் தலையைப் பிடித்து மனைவியை கடிக்க வைத்துள்ளார்'- கேரள கொலையில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு!

0

கேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா (25) என்ற பெண் கடந்த 2020-ம் ஆண்டு மே 7-ம் தேதி பாம்பு கடித்த நிலையில் பெற்றோர் வீட்டில் இறந்துகிடந்தார். அதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், அவரின் கணவர் சூரஜ்ஜிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. உத்ராவை திருமணம் செய்த வங்கி ஊழியரான சூரஜ், உத்ராவுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பத்து லட்சம் ரூபாய், 100 பவுன் நகை, நிலம், புதிய கார் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ள அவரை இயற்கை மரணம் எய்தியதுபோல அவர் பெற்றோரை நம்பவைக்கவும், இன்னும் அதிக வரதட்சணைக்கு ஆசைப்பட்டு வேறு திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். தங்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருந்தபோதும், தன் மனைவி உத்ராவைக் கொல்ல நினைத்துள்ளார்.

பாம்பு மூலம் மனைவியை கொலை செய்த சூரஜ்

அடூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அணலி வகை பாம்பைக்கொண்டு கடிக்க வைத்து உத்ராவை கொலை செய்ய முதலில் முயற்சித்துள்ளார் சூரஜ். அந்த நேரத்தில் கூச்சலிட்ட உத்ராவை மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் தப்பிவிட்டார். சிகிச்சைக்குப் பின்னர் கொல்லம் அஞ்சல் பகுதியில் உள்ள தன் பெற்றோர் வீட்டில் ஓய்வில் இருந்த உத்ராவை சூரஜ் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்ற நல்ல பாம்பைக் கொண்டு உத்ராவைக் கடிக்க வைத்துள்ளார். பாம்பு கடித்ததால் உத்ரா இறந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கேரளம் இதுவரை கேட்டிராத வகையில் கொடூரமாக நடைபெற்ற இந்தக் கொலையும் வழக்கும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சூரஜ்ஜுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் வழக்கை விசாரித்த கொல்லம் கோர்ட் சூரஜ் குற்றவாளி என இன்று அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) சூரஜ்ஜுக்கு என்ன தண்டனை என்பதை கோர்ட் அறிவிக்க உள்ளது. அவர் கோர்ட் காவலில் இருக்கும்போதே குற்றவாளி எனத் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

Also Read: `அணலி, கருமூர்க்கன்; நள்ளிரவு 2.30 மணி; பாட்டிலில் கொண்டுவரப்பட்ட பாம்பு’-கேரளாவை உலுக்கிய கொலை

சூரஜ்ஜுக்கு பாம்பு கொடுத்த சுரேஷ் என்பவர் முதலில் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் கொலைக்கு எனத் தெரியாமல் பாம்பு கொடுத்ததால் பின்னர் இந்த வழக்கின் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் 87 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். 288 ஆவணங்கள், 48 பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் பாம்பைக் கொண்டு கடிக்க வைப்பதற்கு முன்பு அது சம்பந்தமாக சூரஜ் இணையதளத்தில் தேடிய ஆதாரங்களும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. மனைவி இயற்கையாக இறந்ததுபோல காட்டுவதற்காக கொலை ஆயுதமாக பாம்பை கையில் எடுத்துள்ளார் சூரஜ். மனைவியைக் கொன்றபிறகு நாக தோஷம் காரணமாக அவர் பாம்பு கடித்து இறந்துள்ளார் என்பதை காட்ட இவ்வாறு செய்துள்ளார். மனைவி இயற்கையாக இறந்தால் அவரது சொத்துகளும் கிடைக்கும், வேறு திருமணமும் செய்துகொள்ளலாம் எனத் தப்புக்கணக்குப் போட்டு இந்தக் கொலைபாதகத்தை செய்துள்ளார் சூரஜ்.

கைது செய்யப்பட்டுள்ள சூரஜ்

அதிலும், சூரஜ் பாம்பின் தலையைப் பிடித்து தன் மனைவி உத்ராவை கடிக்க வைத்துள்ளது தெளிவாகியுள்ளது. ஏனென்றால், சாதாரணமாக பாம்பு கடித்தால் அதன் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி 1.7 செ.மீ இருக்கும் என்றும், அதன் தலையைப் பிடித்து கடிக்க வைத்தால் பற்களுக்கு இடையேயான இடைவெளி 2.8 செ.மீ வரை இருக்கும் எனவும் டம்மி மூலம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக குளத்துப்புழா அரிப்பாவில் உள்ள வனத்துறை பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு ஜூலை கடைசி வாரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அதற்காக உத்ராவின் எடை மற்றும் உயரத்துக்கு ஏற்ப ஒரு உருவம் செய்யப்பட்டு, அதில் கோழி இறைச்சி கட்டி வைத்து பாம்பைவிட்டு கடிக்க வைத்து டம்மி சோதனை நடத்தி அறிக்கை அளிக்கப்பட்டது. உத்ராவின் உடலில் 2.5 செ.மீ மற்றும் 2.8 செ.மீ அளவுகளில் காயம் உள்ளது தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் உத்ராவை கடித்த பாம்பின் பிரேத பரிசோதனை முடிவில் அந்தப் பாம்பு ஏழு நாள்கள் பட்டினியாக இருந்ததும் கண்டறியப்படுள்ளது. எனவே அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்து எடுத்து வந்திருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டது. கேரளத்தையும் தாண்டி அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3DspwFi
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*