`முறைகேடுகளை கண்டுகொள்ளாத அமைச்சர்; இதற்கு பெயர்தான் ஆய்வா?' - ஆதங்கத்தில் விவசாயிகள்

0

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை, கடிகை ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலையையும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார்.

நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி

Also Read: நெல் கொள்முதல்: ``ஆன்லைன் பதிவு இல்லாமலும் நெல் வழங்கலாம்!" - உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ``விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விரைந்து நெல்லை கொள்முதல் செய்யவும், அதனை பாதுகாப்பாக கிடங்குகளில் சேமிக்கவும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 259 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நாளொன்றுக்கு 10,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

நேரடி கொள்முதல் நிலையத்தில் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் நடைபெற்று வருகிறது. கொள்முதலை தீவிரப்படுத்தும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விவசாயிகள் இருக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று நடமாடும் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நெல்லின் ஈரப்பதம் உலர்த்துவதற்க்கு தேவையான உலர் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் அதை பயன்படுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. நெல்லின் ஈரப்பத வரம்பு அதிகப்படுத்துவது குறித்து, ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லை அரிசியாக மாற்றி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த அரசு ஆலோசனை செய்து வருகிறது’’ எனத் தெரிவித்தார்.

ஆய்வு செய்த அமைச்சர்

Also Read: `நெல் கொள்முதல் ஊழல்கள்; முடிந்தால் தடுத்துப் பாருங்கள்!' - மு.க. ஸ்டாலினுக்கு `ஊழல்பேய்'களின் சவால்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் காலதாமத்தால் விவசாயிகள் சந்திக்கும் துயரம் குறித்து, நேற்று முன்தினம் பசுமை விகடன் இணையதளத்தில் விரிவான செய்தியும், ஆவணப்படமும் வெளியானது.

அதனைத் தொடர்ந்துதான், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உணவுத்துறை அமைச்சர், தஞ்சையில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய வந்தார். ஆனால் இந்த ஆய்வினால் எந்தப் பலனும் இல்லை. எந்த முறைகேட்டையும் அமைச்சர் கண்டுபிடிக்கவும் இல்லை. கண்டுபிடிக்க விரும்பவும் இல்லை.

அமைச்சர் இங்கு ஆய்வுக்கு வரப்போகிறார் என்ற தகவல் முன்கூட்டியே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களுக்கும், நேரடி நெல் கொள்முதல் நிலை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்ப கொள்முதல் நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. ரகசிய திடீர் ஆய்வு மேற்கொண்டால்தான் முறைகேடுகளையும், கால தாமதத்தால் விவசாயிகள் சந்திக்கும் துயரத்தையும் அமைச்சரால் கண்கூடாக அறிந்துகொள்ள முடியும். இதையெல்லாம் செய்யவில்லையென்றாலும் கூட, ஆய்வுக்கு வந்த அமைச்சர், நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள பகுதியின் சுற்றுவட்டார விவசாயிகளைச் சந்தித்து குறைகளை கேட்டிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. ஏற்கனவே நெல் விற்பனை செய்த விவசாயிகளின் விவரங்கள் அந்தந்த கொள்முதல் நிலையங்களில் உள்ளன.

விவசாயி சுகுமாறன்

அவர்களை போனில் தொடர்பு கொண்டு, அவர்களது அனுபவங்களை கேட்டு அறிந்திருக்க வேண்டும். இதையெல்லாம் முறையாக செய்தால்தான் நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளையும் நிர்வாக சீர்கேடுகளையும் முழுமையாக களைய முடியும். `நெல் கொள்முதல் ஊழல்களை முடிந்தால் தடுத்துப் பாருங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊழல் பேய்களின் சவால்’ என காரசாரமாகவும் புள்ளிவிபரங்களுடன் பசுமை விகடன் இணையதளத்தில் கட்டுரையும் ஆவணப்படமும் வெளியானதால், அரசுக்கு கெட்டப்பெயர் வந்துவிடக்கூடது என்பதை ஆட்சியாளர்கள் இதனை கௌரவப் பிரச்னையாக கருதியிருக்கின்றனர். குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின், இப்பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டுமென கருதியிருக்கக்கூடும். ஆனால் இதற்கு ஏற்ப அமைச்சர் தனது ஆய்வை மேற்கொள்ளவில்லை; கண் துடைப்புக்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என ஆதங்கப்பட்டார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3FwtsGP
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*