வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்திலிருக்கும் அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் பேசிய அண்ணாமலை, ``தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்களே ஆகின்றன. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்துள்ளார்கள். கல்விக்கடன், நகைக் கடன் ரத்துச் செய்யப்படும் என்றார்கள். கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சி செய்வதால், பெண்கள் அனைவரும் தங்களது சுருக்குப் பையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். முதலமைச்சர் ஸ்டாலின் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளில் போகிறார்.
Also Read: "அண்ணாமலை என்ன கடவுளா?" - பரவும் ஆடியோ; விழுப்புரம் பாஜக தலைவர் கலிவரதனைச் சுற்றும் சர்ச்சை!
ஜல்ஜீவன் திட்டம் மூலம் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் இந்த பகுதிக்கு பா.ஜ.க அரசு மூலம் கொண்டுவரப்படும். குழந்தை பெற்றெடுப்பது பாரதிய ஜனதா கட்சி. அதற்குப் போட்டி போட்டு பெயர் வைப்பது திராவிட முன்னேற்றக் கழகம். திமுகவுக்குத் தயவு செய்து ஓட்டுப் போடாதீர்கள். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்து 35 ரூபாயாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாநில அரசுகளின் ஒப்புதல் தேவை. இந்து கோயில்கள் மூடப்பட்டுள்ளதைத் திறக்கக்கோரி வரும் 7-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பொய் குற்றச்சாட்டுச் சொல்லி எம்.ஜி.ஆரை வெளியேற வைத்த திமுகவின் துரோகத்தை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்’’ என்றார் அண்ணாமலை.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3iqxarJ
via
