`எரவாடா சிறையில் இருந்து ஆந்திரா வந்த மாமரம்!’ - சிறைவாசிகளுக்கு காந்தி பற்றிய கதை சொன்ன தமிழிசை

0

மாதிரி சிறைச்சாலைத் திட்டத்தின்கீழ் ஸ்ரீ அரவிந்தர் குழுமத்துடன் இணைந்து புதுச்சேரி சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ள “ஜெயில் மஹோத்சவ்“ நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று முன் தினம் கலந்து கொண்டார். அந்த விழாவில் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தமிழிசை, “மத்திய சிறைச்சாலையில் நடக்கும் இந்த சிறை பெருந்திருவிழாவிற்கு வருகை தந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிலர் சூழ்நிலை காரணமாக கைதியாகிறார்கள்.

மகாத்மா காந்தி

சிலர் சூழ்நிலைக் கைதிகளாகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். கண நேரத்தில் கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் தவறிழைத்து விடுகிறார்கள். யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் குற்றம் செய்ய அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் சார்ந்த சூழலும் சமூகமும்கூட பல நேரங்களில் காரணமாகிவிடுகிறது. பல தேசிய தலைவர்கள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள். அரவிந்தர், மகாத்மா, சரோஜினி நாயுடு, சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரம்பிள்ளை போன்றவர்கள்கூட சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார்கள்.

ஆக இந்த சிறை வாசம் வாழ்க்கையில் நம்மை புதுப்பித்துக்கொள்ள உதவி செய்ய வேண்டும். சிறைவாசிகளுக்கு காந்தியைவிட மிகப்பெரிய உதாரணம் இருக்க முடியாது. காந்தியடிகள் தான் சிறையில் இருந்த காலத்தில் ஒரு நிமிடம் கூட வீணடித்தது கிடையாது. அதைப்போல நீங்களும் நேரத்தை வீணடிக்கக்கூடாது. ஹைதராபாதில் மதிப்பிற்குரிய சரோஜினி நாயுடு அவர்களின் வீட்டில் மிகச் சுவையான மாம்பழத்தை தரும் மரம் ஒன்று இருக்கிறது. அந்த மாமரம் எரவாடா சிறையில் இருந்து வந்தது. காந்தி அவர்கள் எரவாடா சிறையில் இருக்கும்போது, ஒரு மாங்கனியை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை அவர் கீழே போடுகிறார்.

புதுச்சேரி சிறை

அது மரமாக வளர்கிறது. அவர் விடுதலை ஆகும்போது ஞாபகமான அந்த சிறு கன்றை எடுத்து வருகிறார். அவர் சிறையில் இருந்து வெளியாகி முதலில் சென்றது தெலங்கானா மாநிலம், அப்போது ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம். அங்கே வரும்போது சரோஜினி நாயுடுவின் இல்லம் இருக்கும் வளாகத்தில் அதை நடுகிறார், இன்றும் அந்த மரம் நல்ல கனிகளை கொடுப்பதோடு, காந்தி அவர்கள் எரவாடா சிறையில் இருந்த அனுபவங்களை சொல்லிக் கொண்டிருக்கிறது.

மாங்கனியை சாப்பிட்டுவிட்டு அந்தக் கொட்டையைத் தூக்கி எறிந்திருக்கலாம். ஆனால் அதனை செடியாக மாற்றி, அது இன்று மரமாக நட்டதால் வளர்ந்து சரித்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் காந்தி அவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஒரு நிமிடத்தை கூட வீணடிக்கக் கூடாது. குடும்பத்திற்கு பயனுள்ளவர்களாக உங்கள் நேரத்தை மிக சிறப்பாக செலவழித்து வருகிறீர்கள். சிறை அனுபவம் என்பது நமது வாழ்க்கையில் புது அனுபவத்தைத் தருவதாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே முதல் முறையாக சிறை திருவிழாவை நடத்துகிறார்கள். நவீன மயமான பார்வையாளர்கள் அறை கட்டப்பட்டிருக்கிறது.

Also Read: `` யாரும் தூங்கிவிடாமல் கல்வி கற்க வேண்டும்!" திறந்தவெளி வகுப்பறை விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை!

சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படுகிறது. சிறைக் கைதிகள் குடும்ப விருப்பம் உறுப்பினர்களோடு பேசுவதற்கு தொலைபேசி வசதி, படிப்பதற்கு நூலகம் ஆகிய வசதிகளை செய்திருக்கிறார்கள். அதற்காக சிறைத்துறையைப் பாராட்டுகிறேன். பெண்களுக்கென்று தனி சிறைச்சாலை வளாகம் அமைத்து இருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறைச்சாலை என்பது மனதிற்கு கனமான ஒன்று. அதையும் நல்ல அனுபவமாக மாற்றி நீங்கள் விடுதலை அடைந்த பிறகு, நம் கையிலும் ஒரு தொழில் இருக்கிறது என்ற நம்பிக்கையை இந்த சிறைச்சாலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mGQ138
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*