ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வேலூர் மாவட்டத்திலுள்ள ஏழு ஒன்றியங்களில் காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கும் இன்றைய தினம் வாக்கு பதிவு நடந்துகொண்டிருக்கிறது. அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூர் ஆகிய மூன்று ஒன்றியங்களுக்கும் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், காட்பாடி ஒன்றியத்திலிருக்கும் அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து ஊர்கூடி தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கிராம மக்கள், வீடுகள்தோறும் கறுப்புக்கொடி கட்டியதுடன், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும், ஊராட்சியிலுள்ள ஒன்பது கிராம வார்டுகளுக்கும் ஒருவர்கூட போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை.
செப்டம்பர் 23-ம் தேதி விசாரணைக்கு வந்த அம்முண்டி கிராமத்தினர் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். ‘‘அம்முண்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவியைப் பொதுப் பிரிவினருக்கு மாற்றக்கோரிய மனுதாரரின் மனுவுக்கு 12 வாரங்களில், அதாவது மூன்று மாதங்களுக்குள் வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆட்சியர் பதிலளிக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்குள் அம்முண்டி ஊராட்சி மன்றத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’’ என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தார் நீதிபதி.
அதன்படி, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும், கிராம வார்டுகளின் பதவிகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஐம்பதாயிரம் வாக்குகளுக்கான மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஐந்தாயிரம் வாக்குகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் வாக்குச் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் அந்த ஊராட்சியில் செய்யப்பட்டன. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி மையத்துக்கு இன்று காலையிலிருந்து தற்போது வரை ஒருவர்கூட வந்து வாக்குச் செலுத்தவில்லை. அலுவலர்கள் மட்டுமே வாக்குச்சீட்டுகளுடன் மையத்துக்குள் அமர்ந்திருக்கிறார்கள். இதனால், வாக்குச்சாவடி மையமே வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து, அம்முண்டி கிராம மக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவரும் விவசாய சங்க பிரதிநிதியுமான ஜெய்சங்கர் மற்றும் ஊர் மக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘எங்கள் பஞ்சாயத்தை பொதுப் பிரிவினருக்கு எப்போது மாற்றுகிறார்களோ அப்போதுதான் வாக்களிப்போம். அம்முண்டி ஊராட்சியில் மொத்தம் 2,045 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவற்றில், பட்டியல் சமூக வாக்குகள் மூன்றுதான் இருக்கின்றன. அவர்களும் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்களிலும் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மட்டுமே உள்ளனர்.
மூன்று பேரையும் தவிர்த்துவிட்டால் மீதமுள்ள 2,042 வாக்குகள் பொதுப்பிரிவினரின் வாக்குகள். இந்த ஊராட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே பொதுப்பிரிவினருக்குத்தான் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுவருகிறது. பெண்களில் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஏற்றுக்கொண்டிருப்போம். ஆனால் இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே இருக்கிற பட்டியல் சமூகத்தினருக்கு ஊராட்சித் தலைவர் பதவியை ஒதுக்கியிருப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
பட்டியல் சமூக மக்கள் முந்நூறு, நானூறு பேர் வசித்தாலும் நாங்கள் ஏற்றுக்கொண்டிருப்போம். தவறுதலாக பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கியிருந்தாலும், ஆரம்பத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவிட்டோம். அதிகாரிகள் தரப்பில் இதுநாள் வரை எங்களைச் சந்தித்து பேசவில்லை. எந்தவிதமான பதிலையும் தெரிவிக்கவில்லை. எங்கள் உரிமைப் பறிபோயிருக்கிறது. அதனால்தான் ஒட்டுமொத்தமாக தேர்தலையே புறக்கணித்துவிட்டோம். ஊர்கூடி முடிவு செய்தப் பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளோம். யாரும் ஓட்டுப்போட மாட்டோம். இதன்மூலம் எங்களின் கோரிக்கையை அழுத்தமாக பதிவு செய்கிறோம்’’ என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2YrzKGU
via
