நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மலையன்குளம் பஞ்சாயத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாதுடையார்குளம் கிராமத்தினர், வாக்குப்பதிவு நடந்த வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் அவரவர் வீடுகளிலேயே இருந்து கொண்டனர்.
அதனால் வாக்குச் சாவடியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போதிலும் மணிக்கணக்காக ஒருவரும் வராததால் வாக்குச் சாவடியில் இருந்த அலுவலர்கள், இதுபற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் புறக்கணிப்பது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் அங்கு சென்றனர். ஆனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே மறுத்துவிட்டதால் செய்வதறியாமல் தவித்தனர்.
சேரன்மகாதேவி தாசில்தார் சிவசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள், கிராமத்தில் உள்ள பெரியவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். அப்போது, தங்கள் கிராமத்தில் 500 வீடுகள் இருக்கும் நிலையில், தங்களுக்கு என தனியாக ரேசன் கடை இல்லாததால் நீண்டதூரம் நடந்து சென்று பொருள்களை வாங்க வேண்டிய நிலை இருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள்.
சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வந்தபோது தங்கள் குறைகளைச் சுட்டிக் காட்டியதாகவும், அமைச்சரும் அதற்குத் தீர்வு காணும் வகையில் சுய உதவிக் குழுவினருக்கான இடத்தில் தற்காலிகமாக கடை அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்ததையும் தெரிவித்தனர்.
ஆனால், சிலரின் தூண்டுதலால் கடை திறக்கப்படாததன் காரணமாகவே வாக்குப்பதிவு தினத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்ததைக் குறிப்பிட்டனர். கிராமத்துக்கு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார்,சுப்பிரமணியன், கிராம மக்களுக்கு விரைவில் ரேசன்கடை அமைத்துக் கொடுக்கப்படும் என உறுதியளித்தார். அதை எழுத்துப்பூர்வமாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பின்னரே பொதுமக்கள் வாக்களிக்கத் தொடங்கினார்கள். சுமார் மூன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் வாக்குப்பதிவு நடந்ததால் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3BfyNzH
via
