வேலூர் கோட்டைக் கோயிலில் 10 நாள்களுக்குப் பின் தரிசன அனுமதி - மறைந்த முப்படைத்தளபதிக்கு மோட்ச தீபம்!

0

சமீபத்தில் பெய்த தொடர் கனமழைக் காரணமாக, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழியில் நீர்மட்டம் உயர உயர... கோயில் வளாகத்துக்குள் உபரிநீர் புகுவதும் அதிகரித்தது. அபிஷேக நீர், மழைநீர் போன்றவை கோயிலிலிருந்து வெளியேற்றுவதற்காக அகழிக்கு நேராக துவாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம், வரலாறு காணாத மழை பெய்த காரணத்தினால், அகழியின் நீர்மட்டம் கிடுகிடுவெனப் பெருமளவு உயர்ந்துவிட்டது.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில்

இதன் காரணமாக, கோயில் துவாரத்துக்குள் உட்புறமாக நீர் புகுந்தது. கிட்டத்தட்ட 20 நாள்களுக்கும் மேலாக முட்டியளவுத் தண்ணீர் தேங்கி நின்ற காரணத்தினால், நவம்பர் 29-ம்தேதி முதல், பக்தர்கள் கோயிலுக்குள் சென்று மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. உற்சவரும், அம்பாளும் தினமும் சிறப்பு அலங்காரத்தில், ராஜகோபுரத்துக்கு வெளியே நந்தி வாகனத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனமும் செய்தனர்.

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்துடன் பொதுப்பணித்துறை மற்றும் தொல்லியல்துறை அதிகாரிகள் இணைந்து கோயிலுக்குள் தேங்கியிருந்த நீரைக் கடும் சிரமத்துக்குப் பிறகு வெளியேற்றினர். தண்ணீர் முழுவதுமாக வடிந்துவிட்டதால், இன்று முதல் கோயிலுக்குள் சென்று ஜலகண்டேஸ்வரரை தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இன்று காலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தலைமைத் தளபதிக்கு மோட்ச தீப வழிபாடு

கணபதி ஹோமத்துடன் பஞ்சமூர்த்தி அபிஷேகம், உச்சிகால பூஜை, ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. 10 நாள்களுக்குப் பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதால், பக்தர்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று ஜலகண்டேஸ்வரரை தரிசனம் செய்துவருகின்றனர். இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு வீர அஞ்சலி செலுத்தும் வகையில், ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் அவரது படம் பொரிக்கப்பட்டிருந்த பேனருக்கு மோட்ச தீபம் ஏற்பட்டிருக்கிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்துத் தரப்பினரும் மோட்ச தீபத்தை வணங்கிச் செல்கின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3pRtx0Z
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*