டி-சர்ட்டுகளுக்கு நடுவில் போதைப் பொருள்; மதிப்பு ரூ.2.34 கோடி! -ஆளில்லா கட்டடத்தில் அதிர்ச்சி

0

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை, மஞ்சள் போன்றவை சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவமும் அதிகரித்து வருகின்றன. ஹெராயின், பிரவுன் சுகர், ஹஷீஷ், சாரஸ், கேட்டமைன், மெத்தாக்குலின், கிறிஸ்டல் மெத்தான் பட்டமைன் ஆகிய போதைப் பொருட்களும் அதிகளவில் பிடிபட்டுள்ளன.

தூத்துக்குடி மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலகம்

போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் வகையிலும், அதில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்கும் வகையிலும் மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவினர் ஆகியோர் குழுக்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் அவ்வப்போது போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி மில்லர்புரம், ஹவுசிங்போர்டு பகுதியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹவுசிங்போர்டு பகுதியில் சோதனையிட்டனர்.

தூத்துக்குடி மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அலுவலகம்

அங்குள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளை திறந்து சோதனையிட்டதில், சில அட்டைப் பெட்டிகளின் மேல் பகுதியில் டி-சர்ட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த டி-சர்ட்டுகளை எடுத்துவிட்டுப் பார்க்கையில் பெட்டியின் அடிப்பகுதியில் பாலீத்தின் பைகளில் வெள்ளை நிற மாவு போன்ற பொருட்கள் இருந்துள்ளன.

ஒருவேளை அது போதைப் பொருளாக இருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள், 23 பாக்கெட்டுகளில் இருந்த அந்த மாவுப் பொருளை பறிமுதல் செய்தனர். அதன் மாதிரியை ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் அது, 'பெஸ்டோ எபிடெர்ன்' என்ற கொடிய போதைப் பொருள் என்பது தெரிய வந்தது. ஆட்கள் யாரும் இல்லாத அந்த கட்டடத்தில் அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிந்தது குறித்து, போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய சிலரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சுஷாந்த் மரண வழக்கு... போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு! - 3ம் நாள் விசாரணையில் ரியா கைது

டி-சர்ட்டுகளில் மறைத்து வைத்து எங்கிருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டது? தூத்துக்குடியில் இருந்து எந்த நாட்டிற்கு கடத்திச் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது எனவும் விசாரணை நடந்து வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட 23 பாக்கெட்டுகளில் இருந்த 23.420 கிலோ கிராம் பெஸ்டோ எபிடெர்னின் சர்வதேச மதிப்பு, ரூ.2.34 கோடி என அதிகாரிகள் கூறினர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3q4740q
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*