தூத்துக்குடி, கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர், ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த அக்டோபர் 8-ம் தேதி இவர், தனது நிறுவனத்துக்குச் சென்ற நிலையில், இவரது வீட்டின் பின்புறக் கதவை உடைத்த மர்ம கும்பல், வீட்டு பீரோவில் வைத்திருந்த 45 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து சிப்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்தோணிராஜ். அவர் புகாரின் அடிப்படையில் தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்தோணிராஜின் வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை உடைத்த பிறகே, அந்த கும்பல் வீட்டுக்குள் கொள்ளையடிக்கப் புகுந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வீட்டுக்குள் கைரேகைகளை சேகரித்த பின்னர், அந்தப் பகுதியில் உள்ள சில வீடுகளின் சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர் தனிப்படையினர். கைரேகைகளின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த மனோஜ்ராஜ், கோவையைச் சேர்ந்த கார்த்திக்ராஜா, ராஜாராம், திண்டுக்கல்லைச் சேர்ந்த திலீப் திவாகர் ஆகிய நான்கு பேர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அத்துடன் அந்த 4 பேரும் காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் கைதாகி, தற்போது திருச்சி மத்திய சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கைவரிசை காட்டிய அந்த 4 பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்தோணிராஜின் வீட்டில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்கநகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களிடமிருந்து 44 சவரன் தங்கநகைகளை மீட்டனர். பின்னர், மீண்டும் 4 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இரண்டு மாதங்கள் கழித்து கொள்ளையர்களை பிடித்தது எப்படி என, தனிப்படையினரிடம் பேசினோம், ``அந்தோணிராஜின் வீட்டின் சி.சி.டி.வி கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதில்தான் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த சில வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தோம்.
அதில் 4 பேர் பின்புற வாசல் வழியாக ஏறி குதித்ததைப் பார்த்தோம். அதை வைத்து கொள்ளையில் ஈடுபட்டது 4 பேர் என்பதை உறுதி செய்தோம். இதையடுத்து அந்த வீட்டில் இருந்து சேகரித்த கைரேகைகளையும் ஆய்வு செய்தோம். இந்த கைரேகைகளை மேட்சிங் செய்து பார்த்ததில் சேலத்தைச் சேர்ந்த மனோஜ்ராஜ், கோவையைச் சேர்ந்த கார்த்திக்ராஜா, ராஜாராம், திண்டுக்கல்லைச் சேர்ந்த திலீப்திவாகர் ஆகிய நான்கு பேர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
ஆனால், அவர்கள் 4 பேருமே வேறொரு கொள்ளை வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில், மனோஜ்ராஜ் மீது 10 திருட்டு வழக்குகளும், கார்த்திக்ராஜா மீது 12 திருட்டு வழக்குகளும், ராஜாராம் மீது 16 திருட்டு வழக்குகளும், திலிப் திவாகர் மீது 14 திருட்டு வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. அவர்களிடமிருந்து 44 சவரன் நகைகளை மீட்டிருக்கிறோம். இதில், சுமார் 20 சவரன் நகைகளை கட்டியாக உருக்கி வைத்திருந்தனர்” என்றனர்.
Also Read: 8 கொலை; 21 வழிப்பறி; என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தூத்துக்குடி துரைமுருகன்; நடந்தது என்ன?
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3EXCfRq
via
