செந்தில் பாலாஜி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் - 94 பேரைக் கைது செய்த போலீஸ்!

0

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், இன்று உயர் மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் அமைப்பதற்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்த வந்த 10 பெண்கள் உட்பட 94 பேரை, கரூர் நகர காவல்துறையினர் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்

விளைநிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் உயர்மின் கோபுரங்கள் அமைத்து, மின்சாரம் கொண்டு செல்வதால், தாங்கள் பெரும் துயருக்கு ஆளாகி வருவதாக, மேற்கு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்காக, விவசாயிகள் அனைவரும் சங்கம் அமைத்து, போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, இன்று காலை 10 மணி அளவில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்துடன் கூடிய, காத்திருப்பு போராட்டத்தை நடத்துவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி, இன்று ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில், கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் விசுவநாதன், மாநில பொருளாளர் ரமேஷ் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம், கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னொருபக்கம், தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கண்டன கோஷங்களையும் விவசாயிகள் எழுப்பினர். தொடர்ந்து, கரூர் கடைவீதி பகுதியிலிருக்கும் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை கரூர் நகர காவல் நிலைய போலீஸார், தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்தில், 10 பெண்கள் உட்பட 94 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

Also Read: `என் குடும்பத்தையே கருவறுப்பேன் என்றார் செந்தில் பாலாஜி!’ - ரெய்டுக்குப் பிறகு வெடித்த தங்கமணி

இதற்கிடையில், செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கைப் பரப்பு செயலாளர் தாராபுரம் சிவகுமார், ``கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து, கடந்த ஆட்சியாளர்களிடம் சிறிது சிறிதாக இழப்பீட்டை பெற்றோம். அதுவும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகையும் வழங்க இல்லை. இந்த நிலையில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் எங்கள் பிரச்னை குறித்து பேசினார். அதேபோல, விவசாயிகள் சங்க மாநாட்டில் விவசாயிகளுடன் கலந்துபேச ஒரு குழு அமைத்து விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில், தி.மு.க ஆட்சியில் அரசு முடிவெடுக்கும் என விவசாயிகளின் கரகோஷங்கள் முழங்க கூட்டத்தில் அறிவித்துவிட்டுச் சென்றார். அவர் பின்னர், தேர்தல் பிரசாரத்தில் ஈரோடு, காங்கேயம் போன்ற இடங்களில், 'விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என தெவித்தார். தி.மு.க அதனை தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டது. தி.மு.க தயாரித்த தேர்தல் அறிக்கை குழுவில், விவசாய சங்கங்கள் சார்பில் எங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்தோம். 'சொன்னதை செய்வோம், செய்வதையே சொல்லுவோம்' என கூறிய தி.மு.க அரசு, இன்னும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

கைதுசெய்யப்பட்ட விவசாயிகள்

இதுகுறித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட முறை சந்திக்க முயன்றபோது, அமரவைத்து பேசக்கூட மறுத்துவிட்டார். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், தி.மு.க அரசு எங்கள் ஆசையில் மண்ணை அள்ளி வீசி விட்டது. 'விடியல் அரசு' என்று கூறி கொள்ளும் தி.மு.க அரசு, உண்மையில் விடியாத அரசாகத்தான் இருக்கிறது. அதனால், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கரூரிலிருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தோம். விவசாயிகளுக்கு இருப்பதே நிலம் ஒன்று தான். அதையும் பிடுங்கி விட்டால், சாலையில் தான் நிற்கதியாய் நிற்கவேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடர்ந்து போராடுவோம்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/30uBNuW
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*