புதுக்கோட்டை: இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி - அச்சத்தில் மக்கள்!

0

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இருக்கிறது அம்மாபட்டினம் கிராம். இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அம்மாபட்டினம் கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 1984-ல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைக் குடி நீர்த்தேக்கத் தொட்டி அம்மாபட்டினம் அரசு ஆண்கள் நடு நிலைப்பள்ளி அருகே கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இந்தத் தொட்டியிலிருந்து அம்மாபட்டினம் பகுதி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே 3 இடங்களில் புதிதாக மேல் நிலைத் தொட்டி வந்த பின்பு, இந்தத் தொட்டியின் தேவை குறைந்துபோனது. ஆனாலும், தற்போது இந்தத் தொட்டியிலிருந்து குறிப்பிட்ட சில பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், கடந்த 37 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நீர்த் தேக்கத் தொட்டியின் நிலை மோசமாக இருக்கிறது.

சிதிலமடைந்த நீர்த்தேக்கத் தொட்டி

சிமெண்ட் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதோடு, சில இடங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருக்கிறது. அருகிலேயே நடு நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி இருப்பதால், இந்தத் தொட்டி இடிந்து விழுந்தால் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான இந்தத் தொட்டியை விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு உடனே இடித்து அகற்ற வேண்டும் என்று அம்மாபட்டினம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறனர்.

இதுபற்றி அம்மாபட்டினத்தைச் சேர்ந்த ஜலிலி அஸீஜ் கூறும்போது, ``எங்கப் பகுதி மக்களுக்கு ரொம்பவே பயன்பட்டுக்கிட்டு இருந்த குடிநீர்த் தொட்டி சிதலமடைஞ்சு போயிருச்சு. தொடர்ச்சியா தண்ணீர் ஒவர் புல்லாகி ஈரமாகி, ஈரமாகி சிமெண்ட் பூச்சு எல்லாம் கொட்டிக்கிட்டு வருது. 6 தூண்கள்ல 4 தூண்கள்ல சிமெண்ட் காரைகள் எல்லாம் கொட்டிப்போய் வெறும் கம்பி மட்டும் தான் தெரிஞ்சிக்கிட்டு இருக்கு. பேஸ்மண்ட் வீக்காக்கிட்டே வருது. எப்ப இடிஞ்சு விழும்னே சொல்ல முடியாத நிலையில தான் இருக்கு. இந்தத் தொட்டியைச் சுத்திலும் ஒருபக்கம் அரசு ஆண்கள் பள்ளி கட்டடம், மற்றொரு பக்கம் அங்கன்வாடி கட்டடம், நூலகம், ரேசன்கடைன்னு நெறைய இருக்கு. ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய தொட்டி, இது விழுந்தா சுற்றிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகில் அரசுப் பள்ளி

குறிப்பாக, பள்ளி பிள்ளைங்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாதுன்னு தான் பாதுகாப்பா இந்தத் தொட்டியை இடிக்கணும்னு ரொம்ப நாளா போராடிக்கிட்டு இருக்கோம். ஆனா, நிதி இல்லைன்னு சொல்லி தட்டிக்கழிச்சாங்க. இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னால ஆய்வு செஞ்சிட்டு விரைவிலேயே இடிச்சிருவோம்னு, இழுவையா சொல்லிட்டுப் போயிருக்காங்க. ஆனா, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்ல. ஆனா, இப்போ நிலைமை தெரிஞ்சும் ஊராட்சி சார்பில் முழு கொள்ளவுக்கு தொடர்ந்து தண்ணீரை ஏற்றி எங்களை பீதியடைய வச்சிருக்காங்க. தண்ணீர் சப்ளைக்கு சரியான ஆளை நியமிக்காததால எல்லா தொட்டிகள்லயும் தண்ணீர் ஓவர் புல்லாகி வீணாகிக்கிட்டு இருக்கு. எங்க பிள்ளைகள் தினமும் பயத்தோட தான் பள்ளிக்கூடம் போயிக்கிட்டு, வந்துக்கிட்டு இருக்குங்க" என்றார் ஆதாங்கமாக.

இதுபற்றி ஊராட்சி தலைவர் அகமது தம்பியிடம் கேட்டபோது, ``கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், மராமத்து செய்தால், இன்னும் சில காலங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டுச் சென்றனர். அதன்பேரில் தொடர்ந்து பயன்பாட்டிலிருந்து வந்தது, இங்கிருந்து 3 பகுதிகளுக்குத் தண்ணீர் செல்கிறது. மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. சமீபத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் விரைவில் இடிப்பதாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கின்றனர். இனி இந்தத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவது தவிர்க்கப்படும்" என்றார்.

நீர்த்தேக்கத் தொட்டி

இந்த நீர்நிலைத் தொட்டி விவகாரம் தொடர்பாக மணமேல்குடி பி.டி.ஓ தமிழ்செல்வனிடம் பேசினோம். ``சமீபத்தில் மணமேல்குடி பகுதி முழுவதும் உள்ள பழுதடைந்த கட்டடங்கள் குறித்து செயற்பொறியாளர்கள் ஆய்வு செய்து இடிப்பதற்கான பரிந்துரைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், இந்தத் தொட்டியும் ஒன்று. இந்தக் கோப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கிறது. இந்தக் கட்டடத்தின் நிலை குறித்து தகவல் கொடுத்துள்ளோம். தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் இருக்கவும், மாற்று வழியில் குடிநீரைக் கொடுக்கவும் ஊராட்சி தலைவரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். மிக விரைவிலேயே இடித்து அகற்றப்பட்டும்" என்றார்.

எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதற்கு முன்னே இந்த நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டியது அரசின் கடமை!

Also Read: புதுக்கோட்டை: அரசுப் பேருந்து மீது மோதிய பைக்; பற்றி எரிந்த பேருந்து - 2 பேர் பலி!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3s0kdKR
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*