தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா மற்றும் தாளடி பட்டத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தேவையான உரங்கள் கிடைக்காததால், இப்பகுதி விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள். வேளாண்மைத்துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு இது குறித்து விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
Also Read: தனியாருக்கு முறைகேடாக விதை விற்பனை: லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய வேளாண் உதவி இயக்குநர்!
இந்நிலையில்தான், உரங்களை பதுக்கி வைத்து அநியாய விலைக்கு விற்பனை செய்யும் தனியார் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இப்பிரச்னையை பற்றி கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தஞ்சை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களது தலையில் காலி உர சாக்குகளை முக்காடுபோல அணிந்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக நூதன போராட்டமும் நடத்தினர். இதுதொடர்பான கோரிக்கை மனுவை கும்பகோணம் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வழங்கினர்.
இதுகுறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், ``டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக சம்பா, தாளடி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பிலிருந்து நெற்பயிர்களை மீட்டு வர வேண்டுமெனில் பொட்டாஷ் உரம் மிக அவசியம் தேவைப்படுகிறது.
முன்பு 1,040 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை பொட்டாஷ் உரம், தற்போது கடுமையாக விலை உயர்த்தப்பட்டு, ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்டாஷ் உரத்தின் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு குறைக்க வேண்டும். மேலும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவு உரங்கள் இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் தனியார் உரக் கடைகளில் உரங்களை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இதனால் கூடுதல் விலை கொடுத்து விவசாயிகள் உரத்தை வாங்கி நெற்பயிரை காப்பாற்ற வேண்டிய சூழலில் உள்ளனர். இதைத் தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் வேளாண்மைத் துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். எனவே விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க செய்ய வேண்டும்.
Also Read: கோமாரி நோய் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; அல்லல்படும் விவசாயிகள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?
ரசாயன உரங்களை பதுக்கி வைத்து அநியாய விலைக்கு விற்பனை செய்யும் தனியார் உரக்கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தி, அங்குள்ள உரங்களை பறிமுதல் செய்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொட்டாஷ் உர விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டுமெனில், உரங்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3EVO4Yf
via
