கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலிருக்கும் ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து ரூ.1.10 கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த லாரியை, கடந்த நவம்பர் 26-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில் வைத்து 'TN 69 BL 5555 ' என்ற காரில் வந்த நபர்கள் வழிமறித்து கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் லாரி ஓட்டுநரான தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து முந்திரிபருப்பு லாரியை கடத்திச் சென்ற கும்பலை மடக்கிப் பிடித்தனர்.
இந்த வழக்கில் போலீஸார் தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகனான ஞானராஜ் ஜெபசிங், விஷ்ணுபெருமாள், பாண்டி, மாரிமுத்து, செந்தில்முருகன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார், மனோகரன் ஆகிய 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அத்துடன், கடத்தப்பட்ட ரூ.1.10 கோடி மதிப்பிலான முந்திரி பருப்பு, லாரி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, உள்ளூர் அ.தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம், ``இந்தவழக்கில், கைதுசெய்யப்பட்ட முக்கிய குற்றவாளி முன்னாள் தொழிலாளர்நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியனின் இரண்டாவது மகன் ஞானராஜ் ஜெபசிங் தான். ஏற்கெனவே, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளினி ஒருவருடன் ஞானராஜ் நெருக்கமாக இருப்பது போன்ற பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
திருமணம் செய்வதாகச் சொல்லி, ஏமாற்றப்பட்ட அந்தப் பெண் தொகுப்பாளினி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்திலேயே நேரில் சந்தித்து புகார் மனுவும் அளித்தார். அந்த நேரத்தில் அமைச்சரான குறுகிய காலத்திலேயே சொத்துக்குவிப்பு சர்ச்சையில் செல்லப்பாண்டியன் சிக்கியிருந்த நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. தன் வாரிசுகளால் பெண் விவகாரத்தில் சிக்கிய சில அமைச்சர்களும் கதி கலங்கிப் போனார்கள். ஞானராஜ் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில்தான், 12 டன் முந்திரியை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த லாரி டிரைவரை மிரட்டி லாரியைக் கடத்திச் சென்ற வழக்கில் ஜெபசிங் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில், செல்லப்பாண்டியனின் மகன் மீது குண்டாஸ் பாய்ந்திருக்கிறது" என்றனர்.
இந்த விவகாரத்தில் செல்லப்பாண்டியனின் அரசியல் மூவ் குறித்தும் அ.தி.மு.க-வினர் நம்மிடம் பேசினார்கள். அதையும் கேட்டோம், ``தூத்துக்குடி அ.தி.மு.க தெற்கு மாவட்டத்தில், தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் தனி அணியாகவும், முன்னாள் செல்லப்பாண்டியன் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். சண்முகநாதன் மீதான அதிருப்தியில் பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் செல்லப்பாண்டியன் அணியில் சேர்ந்து விட்டனர். அ.தி.மு.க-வின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தையும் இரண்டு அணியினரும் தனித்தனியாகவே நடத்தினர்.
செல்லப்பாண்டியன் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, "தூத்துக்குடி எம்.பி தேர்தலில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கினார். எம்.எல்.ஏ எலக்ஷன்லயும் தூத்துக்குடி தொகுதியை தா.ம.க-வுக்கு ஒதுக்கினார். இரண்டு தேர்தலிலுமே தோற்று விட்டோம். சண்முகநாதனும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தோற்றுவிட்டார். நமக்குப் பதவி இல்லேன்னா கட்சியில எவனுக்கும் பதவி இருக்கக்கூடாது" என கட்சியை அழிக்க வேண்டும் என முனைப்போடு செயல்பட்டு வருகிறார். சாதாரண வைத்தியராக இருந்த சண்முகநாதன் அசுர வளர்ச்சி பெற்றது எப்படி தெரியுமா?” என சண்முகநாதன் கட்சியில் வளர்ந்த கதையைப் பற்றி தனக்கே உரிய நக்கலான பாணியில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இது, சண்முகநாதனின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன் மனைவியுடன் இரவில் தூத்துக்குடி சிவன் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கருணாநிதியின் பைக்கை சண்முகநாதனின் உதவியாளர் சகாயராஜ், சந்தனப்பட்டு, தனம் ஆகிய கட்சியினர் வழிமறித்தனர். ‘அண்ணாச்சியப் பத்தியா பேசுற?’ எனச் சொன்னபடியே பிளாஸ்டிக் தாளில் மடக்கி வைத்திருந்த மனித மலத்தை கருணாநிதியின் முகத்தில் பூசிவிட்டு கத்தியால் குத்த முயன்றனர். கருணாநிதியின் மனைவி கூச்சலிடவே கூட்டம் கூடியதும் தப்பியோடினர். இந்த விவகாரம் கட்சிக்குள் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து சண்முகநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது தூத்துக்குடி மத்திய காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவும் செய்திருக்கின்றனர்.
அந்த எப்.ஐ.ஆர் நகலுடன் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-ஐ சந்தித்து கண்ணீர் மல்க புகார் அளித்திருக்கிறார் கருணாநிதி. கருணாநிதி உள்ளிட்டோரை தன் சொந்த செலவில் அழைத்துச் சென்றதே செல்லப்பாண்டியன்தான். எப்படியும் 'மா.செ' பதவி தனக்கு கிடைத்துவிடும் என நினைத்தார் செல்லப்பாண்டியன். இந்த நிலையில், தன் மகன் முந்திரி ஏற்றி வந்த லாரி கடத்தல் வழக்கில் சிக்க, அது செல்லப்பாண்டியனுக்கு மேலும் சிக்கலானது. தற்போது குண்டர் சட்டத்தின் கீழும் வாரிசு கைதாக மனமுடைந்து போனார் செல்லப்பாண்டியன். மகனால் மா.செ பதவிக்கு வில்லங்கம் வந்ததை நினைத்து அண்ணன் டென்ஷன்ஆகியிருக்கிறார். இந்த விவகாரம் சண்முகநாதன் தரப்புக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.
Also Read: தூத்துக்குடி: நடுக்கடலில் நங்கூரம் அறுந்த மிதவைக் கப்பல்! - மீனவர்களால் தடுக்கப்பட்ட விபத்து
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3p2cLNr
via
