மதுக்கடைகளை மூட வேண்டுமென்று பல வருடங்களாகப் பரப்புரை செய்து போராட்டம் நடத்தி வரும் மதுரையைச் சேர்ந்த நந்தினி, பல்வேறு அரசியல் சமூகப் பிரச்னைகளுக்காகப் போராடி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரிடம் நேரில் சென்று மனு அளிக்க தங்கை நிரஞ்சனாவுடன் சென்னை சென்ற நந்தினி இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து நம்மிடம் தெரிவித்த நந்தினியின் கணவர் குணா,
``தமிழ்நாட்டை நாசமாக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடவேண்டும். உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடிய, மதியை மயக்கக்கூடிய போதையூட்டும் மது வகைகளை மக்களுக்கு விற்பனை செய்து, உடல்நலனுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது ஐபிசி பிரிவு 328-ன் படி தண்டனைக்குரிய குற்றம். இக்குற்றத்தை தமிழக அரசே பல ஆண்டுகளாகச் செய்துவருகிறது. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மிக மோசமான பாலியல் குற்றங்கள் உட்பட ஏராளமான குற்றங்களுக்கு டாஸ்மாக் காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளுமே டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என தமிழக மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்தன.
எனவே தமிழ்நாட்டை நாசமாக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியும்,
சென்னைக்கு வெள்ள அபாயத்தை உண்டாக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்,
கோவை மாவட்டத்தில் ஈஷா அமைப்பின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இன்று காலை முதலமைச்சரிடம் மனு கொடுக்க அவர் வீட்டுக்கு சென்ற நந்தினியையும், தங்கை நிரஞ்சனாவையும் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்" என்றார் குணா .
from மாவட்ட செய்திகள் https://ift.tt/30AgE2G
via
