பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் மீது மதுரை மாநகர காவல்துறை பதிவு செய்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.
மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்
இந்த நிலையில், இந்த கருத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை மாநகர காவல்துறையில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து, மாநகர போலீஸார் மாரிதாஸ் மீது 124-A, 153-A , 504, 505 (1) b, 505 (2) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, பின்னர் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.
அதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. ``மாரிதாஸ் அரசை விமர்சிப்பவர். அதனால், அமைதியாக்குவதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது பதியப்பட்ட பிரிவுகள் அடிப்படை ஆதாரமற்றவை" என மாரிதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு அரசுத்தரப்பில், ``முப்படைகளின் தலைமைத் தளபதி மரணத்தில் தேவையற்ற கருத்தை மாரிதாஸ் முன்வைத்திருக்கிறார். மாநில அரசுக்கு எதிராகவும், அதன் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் பதிவு செய்திருக்கிறார். இளம் உள்ளங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாக அவரது பதிவு உள்ளது. இவர் மட்டுமல்லாமல் இது தொடர்பாக தேவையற்ற கருத்துகளை பதிவு செய்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதி, ``சீமான், மாரிதாஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். மனுதாரரை 2 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள், அதனால் தவறான கருத்து பரவிவிடும் என்று அரசு தரப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், மனுதாரர் பதிவிட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அதனால் அவர் மீது 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தது செல்லாது" எனக்கூறி, மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Also Read: `அடித்து ஆடும் அண்ணாமலை... தடுத்து ஆடும் திமுக; வலுக்கும் மாரிதாஸ் விவகாரம்!' - பின்னணி என்ன?
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3GL6StJ
via
