சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி... 2 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் பெருவழிப்பாதை!

0

கேரளத்தின் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால, மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல், தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் படிப்படியாக அதிகரித்து தினசரி 40,000 பக்தர்கள் சபரிமலை தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் ஸ்பாட் புக்கிங் மூலமும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கேரளத்திலும், பிற பகுதிகளிலும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் சபரிமலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் வருகின்றன.

பம்பா

சபரிமலை ஐயப்ப சாமி கோயிலுக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் டிராக்டர்கள் செல்லும் சுவாமி ஐயப்பன் சாலை வழியாக ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். நீலிமலை, சரங்குத்தி மலைப் பாதை வழியாக அனுமதிக்கப்படவில்லை. மேலும் பம்பையில் நீராடவும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி முதல் பம்பையில் நீராட ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பை பத்தணம்திட்டா கலெக்டர் திவ்யா அய்யர் வெளியிட்டார்.

மேலும் கடந்த 12-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் நீலிமலை, சரங்குத்தி மலைப்பாதை வழியாக சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே பம்பா நதிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஷவர்களில் பக்தர்கள் குளித்துவந்தனர். இந்த நிலையில் பம்பா நதியில் நீராடவும், பாரம்பர்ய நீலிமலைப் பாதையில் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வரும் 26-ம் தேதியுடன் மண்டல காலம் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு நான்கு நாள்கள் சபரிமலை நடை சார்த்தப்பட்டிருக்கும். மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலை

மகரவிளக்கு பூஜை காலத்திற்கு முன்பாகவே பக்தர்கள் எண்ணிக்கையை நாற்பதாயிரத்தில் இருந்து 60,000 ஆக உயர்த்தவும், எருமேலியில் இருந்து கரிமலை வழியாக பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எருமேலியில் பேட்டை துள்ளும் பக்தர்கள் பாரம்பர்யப் பாதை வழியாக சபரிமலை தரிசனம் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும். 40 கிலோ மீட்டர் வரையிலான கரிமலை பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவை ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்ததால், பாதையை சீரமைக்கச் சற்றுக் காலதாமதம் ஆகும் எனக் கூறப்படுகிறது. சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாகவும். சபரிமலை வருமானம் 40 கோடி தாண்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிலிர்ப்பூட்டும் சபரிமலை அனுபவம்



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3GMfoJf
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*