தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அதன் வளாகத்தில் கடந்த 4-ம் தேதி கழிவறை தொட்டியில் கொலை செய்யப்பட்ட பெண் சிசு உடல் கிடந்தது. கழிவறையைச் சுத்தம் செய்யச் சென்ற ஊழியர்கள் குழந்தை உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக டாக்டர்கள் இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த பட்டியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் தஞ்சாவூர், பூதலூர் அருகே ஆலக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த பிரியதர்ஷினி (23) என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.``பிரியதர்ஷினி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திருப்பூரில் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது வாலிபர் ஒருவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் நெருங்கிப் பழகியதால் பிரியதர்ஷினி கர்ப்பமடைந்து விட்டார். இந்த நிலையில், அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
அதனால் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்த பிரியதர்ஷினி சொந்த ஊருக்கு வந்து விட்டார். பின்னர் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தன் பெற்றோருடன் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் வயிற்று வலி எனக் கூறி சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார். அவருக்கு உதவியாக பிரியதர்ஷினியின் தந்தையும் சென்றிருக்கிறார்.
கழிவறைக்குச் சென்ற பிரியதர்ஷினிக்கு அங்கேயே குழந்தை பிறந்திருக்கிறது. தகாத உறவில் பிறந்த குழந்தை என்பதால் தொப்புள் கொடியைக் கூட அகற்றாத அந்த பெண், சிசுவை இரக்கமே இல்லாமல் கழிவறை தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்திருக்கிறார். கிட்டதட்ட அரை மணி நேரம் கழிவறைக்குள் இருந்து விட்டு வெளியே வந்த பிரியதர்ஷினி டாக்டர்களிடம் தெரிவிக்காமல் நேராக வீட்டுக்குச் சென்று விட்டார்.
சி.சி.டி.வி-யில் பதிவான காட்சிகள் மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் பதிவேடு ஆகியவற்றைக் கொண்டு விசாரணை செய்ததில் பெண் சிசுவைக் கொலை செய்தது பிரியதர்ஷினி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, அவரைக் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.
Also Read: தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை கழிவறைத் தொட்டிக்குள் பெண் சிசுக்கொலை! - சிசிடிவி மூலம் விசாரணை
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lD5mlE
via
