பொறியாளர் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு அலுவலர்கள் போராட்டம்! - வெறிச்சோடிய அலுவலகங்கள்

0

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றிய இளநிலை பொறியாளராகப் பணியாற்றியவர், சந்தோஷ்குமார். இவர் கடந்த 8-ம் தேதி காவல்கிணறு பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அரசியல்வாதிகள் சிலரின் முறைகேடுகளுக்குத் துணைபோக மறுத்ததால் அவருக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பொறியாளர் சந்தோஷ்குமார்

அவர் மரணத்துக்குக் காரணமான அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஏற்கெனவே இது தொடர்பாக இரண்டு நாள்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். ஆனாலும், அவர் மரணம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களும் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெறிச்சோடிக் கிடக்கும் அலுவலகம்

அனைத்து துறைகளின் ஊழியர்களும் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்ததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. அவசியப் பணிகளுக்காக அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.

விடுப்பு எடுத்த அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தோஷ்குமார் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நாதன், ஆரோக்கியதாஸ் ஆகியோர் பேசுகையில், ``பொறியாளர் சந்தோஷ்குமார் மரணம் தற்செயலானது அல்ல. அவரை தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறார்கள். அவரிடம் கடைசியாக செல்போனில் பேசியது யார் என்பதை விசாரிக்க வேண்டும்.

சந்தோஷ்குமார் மரணத்தின் பின்னணியில் சக்திவாய்ந்த நபர்கள் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் இருக்கிறது. அதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்

எந்த அரசு வந்தாலும் அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு மட்டும் மாறவேயில்லை. இந்தப் போக்கு தவறானது. அதனால் அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்” என்றார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3EZ4qzw
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*