புதுச்சேரி: `பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நாட்டு வெடிகுண்டு!’ -வீடியோ வெளியிட்டவரை தேடும் போலீஸ்

0

புதுச்சேரியில் இன்று காலை சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ காட்சி அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிக சரியாக 24 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் ஸ்லோ மோஷனில் நடந்து செல்லும் நடந்து செல்லும் அந்த இளைஞர், தனது கையில் வைத்திருக்கும் நாட்டு வெடிகுண்டை தூக்கி வீசுகிறார். அது தரையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து புகை மேல்நோக்கி செல்கிறது. வீடியோவின் பின்னணியில் “ஜெயிலுக்கு போயிட்டு வருவோம் கொலை கேஸுல.. எங்கள பத்தி கேட்டுப்பாரு நாங்களெல்லாம் வந்திருப்போம் நியூஸுல..” என்ற கானா பாட்டு ஒலிக்க ஸ்லோமோஷனில் நடந்து வருகிறார் அந்த இளைஞர்.

நாட்டு வெடிகுண்டு

புதுச்சேரியில் சமீபகாலமாக நாட்டு வெடிகுண்டுகள் வீசி படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ காட்சியால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் புதுச்சேரி மக்கள்.

வீடியோ காட்சி குறித்து போலீஸ் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், வீடியோவில் வந்து நாட்டு வெடிகுண்டு வீசும் அந்த இளைஞரின் பெயர் தர்மசீலன் என்றும் அவர் லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து தலைமறைவாக இருக்கும் அந்த இளைஞரை தேடி வருகின்றனர் லாஸ்பேட்டை காவல்துறையினர். இந்த சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ”கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மசீலனுக்கு பிறந்த நாள் வந்திருக்கிறது.

நாட்டு வெடிகுண்டு வீசும் தர்மசீலன்

அதனை வித்தியாசமாகவும், கெத்தாகவும் கொண்டாட வேண்டும் என்றும் நினைத்த தர்மசீலன் நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்க வைத்து அதனை நண்பர்களை வீடியோ எடுக்கும்படி கூறியிருக்கிறார். அந்த வீடியோவை அவரின் நண்பர்கள் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்திருக்கின்றனர். அந்த வீடியோதான் தற்போது வெளியாகியிருக்கிறது.

தர்மசீலனும் அவரின் நண்பர்களும் தற்போது தலைமறைவாகிவிட்டனர். விரைவில் அவர்களை வளைத்துப் பிடித்துவிடுவோம். அவர்களை பிடித்த பிறகுதான் எந்த இடத்தில் வெடித்தார்கள், அந்த நாட்டு வெடிகுண்டு அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது போன்ற விபரங்கள் தெரியவரும். ஆர்வக் கோளாறால் தற்போது போலீஸிடம் சிக்கியிருக்கும் தர்மசீலன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை” என்றனர்.

போலீஸால் தேடப்படும் தர்மசீலன்

Also Read: புதுச்சேரி: மது போதையில் தனியார் விடுதியில் தகராறு - டாடி ஆறுமுகத்தின் மகனைத் தேடும் போலீஸ்!

நாட்டு வெடிகுண்டு வெடிக்கும் அந்த வீடியோ காட்சியின் பின்னணியில் குடியிருப்புகள் போன்ற கட்டடங்கள் தெரிகின்றன. உண்மையில் அவை குடியிருப்புகளாக இருக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை உணர்ந்து காவல்துறை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/33448sV
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*